பழநி
அதிமுக, தேமுதிக இடையேயான கூட்டணி இடைத்தேர்தலில் மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு இன்று (திங்கள்கிழமை) காலை சுவாமிதரிசனம் செய்ய வந்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக தொண்டர்கள், தமிழகமக்கள் அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று முருகனை வேண்டிக்கொண்டேன்.
அதிமுக, தேமுதிக இடையேயான கூட்டணி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தொடரும். பாரதிய ஜனதா கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்தபின்னரே அதிமுக, பா.ஜ., உறவு குறித்து தெரியவரும்.
கஷ்டப்படாமல் குறுக்குவழியில் முன்னேறத்துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே நீட் தேர்வில் தவறு செய்கிறார்கள். நல்லமுறையில் படித்து மருத்துவராகும் மாணவர்களே சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவார்கள்.
தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தான் விளக்க அளிக்கவேண்டும்" என்றார்.