சென்னை
புற்றுநோய் பாதித்த தாய், வயதான தந்தையை விட்டுவிட்டு எப்படி அமெரிக்கா போவது என்கிற மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் அமெரிக்கவாழ் இந்தியரான மகன். சென்னை திருமங்கலத்தில் இந்தது துயரச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை , திருமங்கலத்தை அடுத்த அண்ணா நகர் மேற்கு, 20-வது தெரு, W பிளாக்க்கில் வசித்து வருபவர் ராய் (71). இவரது மகன் எட்வர்ட் (49). இவர் அமெரிக்காவில் உள்ள பிரபல பெட்ரல் எக்ஸ் நிறுவனத்தில் புரோகிராம் மேனேஜ்மெண்ட் அட்வைசராகப் பணியாற்றி வந்தார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா சென்று அங்கு பணியில் சேர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் பேரீனா என்கிற பெண்ணை மணந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றுவிட்டார்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று தனியே வசிப்பதாகத் தெரிகிறது. சென்னையில் எட்வர்டின் தந்தை மற்றும் தாய் மட்டும் தனியே வசித்து வருகின்றனர். மகனைத் தவிர வயதான இவர்களுக்கு ஆதரவில்லை. இந்நிலையில் எட்வர்டின் தாயார் திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்த எட்வர்ட் உடனடியாக கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னைக்குக் கிளம்பி வந்தார். தாயாரின் மருத்துவ சிகிச்சைகளைக் கவனித்துக் கொண்டார். இந்நிலையில் அவரது விடுப்பு முடிந்து சில நாட்களில் மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டிய நிலையில் தனது தாயாரின் உடல் நிலை, பெற்றோரை ஆதரவற்று விட்டுப்போகிறோம் என்ற மன உளைச்சலில் எட்வர்ட் தவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவிலும் அவரது குடும்பம் அவருடன் இல்லாத நிலையில் அதை நினைத்து மன உளைச்சலில் இருந்த எட்வர்ட், தனது குடியிருப்பின் மொட்டை மாடி மீது நேற்றிரவு ஏறிச் சென்று அங்கு தீக்குளித்து உயிரிழந்தார். அவரது உடல் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையானது.
இன்று காலை 7 மணியளவில் மேல் வீட்டில் வசிப்பவர் வீட்டின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்யச் சென்ற போது கருகிய நிலையில் உடல் ஒன்று கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து அங்கு சென்ற போலீஸார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளயாகின.
இதையடுத்து எட்வர்டின் கருகிய உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வயதான பெற்றோரைக் கவனிக்க முடியாமலும், தாயாரின் புற்றுநோயைக் காணச் சகிக்காமலும், அமெரிக்க வாழ்க்கையினால் குடும்பமே இல்லாமல் தனித்து விடப்பட்டதாலும் 49 வயதில் அமெரிக்க வாழ் இந்தியர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டது அக்குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.