தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபந்திர சயனர் திருக்கோயிலில் சூழ்ந்துள்ள மழை நீர். 
தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டித் தீர்த்த மழை: ஆண்டாள் கோயிலில் மழைநீர் புகுந்தது; பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

இ.மணிகண்டன்

ஸ்ரீவில்லிபுத்தூர்

தொடர் மழையால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் - வடபத்திர சயனர் கோயில்களை மழை நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் தவித்தனர்.

மேலும், தொடர் மழையால் பிளவக்கல் பெரியாறு அணையில் நீர் மட்டம் நேற்று ஒரே இரவில் 14 அடி உயர்ந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கி இரவு மற்றும் இன்று அதிகாலை வரை தொடர் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரலான மழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி அருப்புக்கோட்டையில் 15 மி.மீ, சாத்தூரில் 112 மி.மீ, சிவகாசியில் 67 மி.மீ, விருதுநகில் 40 மி.மீ, திருச்சுழியில் 23 மி.மீ, ராஜபாளையத்தில் 74 மி.மீ, காரியாபட்டியில் 53 மி.மீ, வெம்பக்கோட்டையில் 26 மி.மீ, கோவிலாங்குளத்தில் 16 மி.மீ, பிளவக்கல் அணையில் 115 மி.மீ, திருவில்லிபுத்தூரில் 128 மி.மீ, அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 146 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை காரணமாக ஆண்டாள் கோயில் கோபுர வாசல் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும், வசபத்திரசயனர் திருக்கோயில் சுற்றுப் பிரகாரங்களிலும் மழை நீர் புகுந்தது. இதனால், பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் சிரமப்பட்டனர். அதையடுத்து, கோயில் பிரகாரத்திற்குள் இருந்த மழை நீரை அகற்றும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், தொடர் மழை காரணமாக பிளவக்கல் பெரியார் அணையின் நீர் மட்டம் 4 அடியிலிருந்து நேற்று ஒரே இரவில் 18 அடியாக உயர்ந்தது. இதனால், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT