சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைப்பது பொது மக்களின் சமூகப் பொறுப்பு என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், டெங்குவைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் குறித்தும் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலக் குறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வரும் நிலையில், டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், “சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும், அதில் அரசு மெத்தனப்போக்கைக் காட்டுவதும்தான் டெங்கு பரவுவதும், உயிரிழப்புக்கும் காரணம். சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். டெங்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும்.
டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு அரசு செலவிட உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் அடியில் தேங்கியிருக்கும் நீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கட்டாய ஹெல்மெட், பிளாஸ்டிக் தடை என அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை நாம்தான் மதித்து நடக்க வேண்டுமென்றும், சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூகப் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினர்.
டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.