தமிழகம்

#GoBackModi மூலம் விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி: எச்.ராஜா

செய்திப்பிரிவு

சென்னை

#GoBackModi மூலம் பிரதமர் மோடி, தமிழகம் வருவதை விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தில் இன்று நடக்கும் 56-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவும், சிங்கப்பூர் இந்தியா 2019 ஹேக்கத்தான் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கவும் பிரதமர் மோடி, இன்று காலை சென்னை வந்தார்.

பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதன் ஐஐடி கல்வி நிறுவனத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

இதற்கிடையே இன்று காலையில் இருந்து #GoBackModi என்ற ஹேஷ்டேக், இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''Go Back Modi என்று மோடி தமிழகம் வருவதை, ட்ரெண்ட் செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி. #TNWelcomesModi'' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோடி குறித்து, பத்திரிகையாளர் சோ பேசிய வீடியோ ஒன்றையும் எச்.ராஜா, தனது ட்வீட்டில் இணைத்திருந்தார்.

#GoBackModi போலவே #TNWelcomesModi, இந்திய அளவில் ட்ரெண்டாகி, 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT