தமிழகம்

உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறள்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அழைப்பு

கி.மகாராஜன்

மதுரை

உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும் மனப்பாடமாகச் சொல்ல வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ் ஆர்வலரும், கூடுதல் மாவட்ட நீதிபதி செம்மலின் மகனுமான பழமலையை அண்மையில் சந்தித்தபோது அவர் திருக்குறள் முனுசாமி புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார்.

அந்த புத்தகத்தைப் படித்த போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், மகாதேவன் ஆகியோர் திருக்குறளின் பெருமைகள் குறித்து அடிக்கடி தெரிவித்தது நினைவிற்கு வந்தது.

ஒவ்வொரு தமிழனும் திருக்குறளைக் கண்டிப்பாக மனப்பாடமாக படித்து வைத்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
இன்று (செப். 30) முதல் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கும் வழக்கறிஞர்களின் ஒருவரை தான் தேர்வு செய்கிறேன்.

அவர் மதியம் அல்லது மாலையில் ஒரு திருக்குறளை தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று (செப்.30) வழக்கறிஞர் திருவடிக்குமார் திருக்குறள் வாசிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் திருக்குறளை ஒப்புவிக்கிறார்.

நீதிபதி உத்தரவின்படி தினமும் மதியம் 1.30 மணிக்கும், மாலை 4.45 மணிக்கும் திருக்குறள் ஒப்புவிக்கப்படவுள்ளது.

SCROLL FOR NEXT