சென்னை
உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தில் இன்று நடக்கும் 56-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவும், சிங்கப்பூர் இந்தியா 2019 ஹேக்கத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கவும் பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்துக்குச் சென்றார்.
முதலில் ஐஐடியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான் 2019 போட்டியில் பரிசுளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பரிசுகளையும், விருதுகளையும் வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''பள்ளிகள் முதல் உயர் கல்வி நிறுவனங்கள் வரையிலும், ஆராய்ச்சிப் படிப்புகளிலும் சூழியல் சார்ந்த முறையும் உருவாக்கப்பட்டு இருப்பது புதிய கண்டுபிடிப்புகளுக்குத் துணைபுரியும். இந்தியா இரு மிகப்பெரிய காரணங்களுக்காக புத்தாக்கத்தையும், கண்காணிப்பையும் ஊக்கப்படுத்துகிறது.
முதலாவதாக இந்தியாவின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, வாழ்க்கையை எளிதாக்க எளிமையான தீர்வுகள் தேவைக்காகவும், இரண்டாவதாக இந்தியாவில் இருந்துகொண்டு உலகில் உள்ள பிரச்சினைகளைத் தீர்வு காண்பதற்காகவும் ஊக்கப்படுத்துகிறோம். உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியாவுக்குக் கடமை இருக்கிறது. இது நமது இலக்கு, நமது கடமை.
இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கு புத்தாக்கமும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் முக்கியமான பணியைச் செய்யும்.
இந்த ஹேக்கத்தானில் பங்கேற்றவர்கள் ஏராளமான தீர்வுகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதில் முக்கியமானது கேமரா. இந்த கேமரா மூலம் யாருக்கு வேண்டுமானாலும் கவனம் செலுத்த முடியும். உதாரணமாக நாடாளுமனறத்தில் நான் அவைத் தலைவருடன் பேசுகிறேன் என்றால், எனக்கு கவனம் அளிக்கப்படும். இது இந்த கேமராவால்தான் சாத்தியமானது. இது நிச்சயம் நாடாளுமன்றத்துக்குச் செல்பவர்களுக்கு உதவும்.
குறிப்பாக, இந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சி உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் குறைப்பதற்கு தீர்வுகளை வழங்கும். 6-ம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு இயந்திரத்தின் மூலம் கற்றலும் செயற்கை நுண்ணறிவை மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள பார்வையாளர்கள் யுனெஸ்கோவின் உலகப் பிரசித்தி பெற்ற மாமல்லபுரத்துக்குச் சென்று பார்த்து வர வேண்டும். சென்னையின் விருந்தோம்பலும், வரவேற்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக காலை நேரத்தில் வழங்கப்படும் சிற்றுண்டியான இட்லி, தோசை, வடை, சாம்பார் போன்ற தென்னிந்திய உணவுகள் எனக்குப் பிடிக்கும்’’.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிடிஐ