சென்னை
காந்திக்கு தமிழ் மீதும், தமிழகம் மீதும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவரைக் கொண்டாடவும், போற்றவும் தமிழர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது என்று தமிழக தொல்லியல் துறை ஆணையர் த.உதயசந்திரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த ஓராண்டாக ‘இந்துதமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்திலும், அதற்கு முன்பாக ‘இந்து தமிழ்’ இணையதளத்திலும் நடுப்
பக்க ஒருங்கிணைப்பாளர் ஆசை எழுதி வந்த ‘காந்தி’ தொடர்களை ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் ‘இந்து தமிழின்’ ஓர் அங்கமான ‘தமிழ் திசை’ பதிப்பகம் ஒரு நூலாகக் கொண்டு வந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவுக்கு சென்னை வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் இரா.இளவரசி தலைமை தாங்கினார். வருமான வரித் துறை அதிகாரியும், எழுத்தாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில், தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ‘என்றும் காந்தி’ நூலை வெளியிட, முதல் பிரதியை காந்திய
செயல்பாட்டாளர் வெ.ஜீவானந் தம் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன்: காந்தியின் கொள்கைகளும், அவர் மேற்கொண்ட பரிசோதனைகளும் இன்றும் பொருந்தக் கூடியவையாக உள்ளன. அவரது கொள்கைகள், முன்னெடுத்த கருத்தாக்கங்களில் முக்கியமானது அகிம்சை. எதிர்தரப்பினரின் இதயத்தை வெற்றிகொள்வதே அகிம்சையின் குறிக்கோள்.
அகிம்சை சாதித்தது மிக மிக அதிகம். தற்போது இருப்பதைப்போன்று தகவல் தொடர்பு வசதிகளும் சமூக வலைதளங்களும் இல்லாத அன்றைய காலகட்டத்தில் காந்தியின் கொள்கைகள் மக்களை சென்றடைந்துள்ளன. எளிய மனிதர்கள் பயன்படுத்
தும் சாதாரண உப்பைக் கொண்டு போராட்டம் நடத்தி மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை காந்தி பணியவைத்தார்.
காந்தியை கொண்டாட தமிழர்களுக்கு அதிக உரிமை உண்டு. காரணம், தமிழ் மீதும், தமிழகம் மீதும் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் 200 முறை தமிழகம் வந்துள்ளார். 1915 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற அளவில் தமிழகத்துக்கு பயணித்துள்ளார். தமிழர்கள் மீது, தமிழ் இலக்கியங்கள் மீது அவருக்கு அளவுகடந்த அன்பு இருந்தது.
சாதாரண காந்தியை மகாத்மா ஆக்கியது தமிழகம்தான். அவர் தமிழ் கற்க முயற்சி செய்தார். திருக்குறளை நேசித்தார். திரு
வாசகம், கம்பராமாயணம் மீதும் அவருக்கு அதிக விருப்பம். அவர் சிறைக்குச் சென்றபோது தமிழ் நூல்களை எடுத்துச் சென்
றார். காந்தியைப் போற்றவும் அவரைக் கொண்டாடவும் தமிழர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது.
வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் இளவரசி: காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள்நடத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் காந்தி தொடர்பான புத்தகம் வெளியிடப்படுவது பாராட்டுக்குரியது. உலக வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டு விடுதலைக்காக, மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதற்காக போராடியிருப்பார்கள். மாமனிதர்கள், யுகபுருஷர்கள் தோன்றியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் காந்தி.
சுதந்திரத்துக்காக எத்தனையோ பேர் போராடினார்கள். ஆனால், அனைவரும் மகாத்மா ஆகவில்லை. அகிம்சை என்ற வலிமையான
ஆயுதத்தை நமக்கு கொடையாகத் தந்தவர் காந்தி. உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட தத்துவம் அகிம்சை. அது போர்முறைக்கு முற்றிலும் எதிரான தத்துவம். அகிம்சை மீது அவருக்கு அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. அகிம்சை கடைபிடிக்கப் பட்டிருந்தால் 2-வது உலகப் போரில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நேர்ந்திருக்காது.
காந்திய செயல்பாட்டாளர் ஜீவானந்தம்: இந்து தமிழ் நாளிதழில் வெளியான காந்தி தொடரை படித்த போது காந்தியுடன் மீண்டும் பயணித்த அனுபவம் எனக்கு கிடைத்தது. காந்தியை கேடயமாகப்பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அவர் யார் யார் நலனுக்காக போராடினாரோ, அவர்களால் தற்போது நிராகரிக்கப்படுகிறார்.
அவர் நடத்திய போராட்டம் பொதுவுடைமை போராட்டம். அப்படிப்பட்டவரை கம்யூனிஸ்ட்கள் மதிக்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான். சமூக புரட்சிக்கு காந்தி மிகச்சிறந்த பாதுகாப்பான ஆயுதம்.
வருமான வரி அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி: காந்தியின் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அகிம்சை மீது காந்திக்கு அசைக்க முடியாத நம் பிக்கை இருந்தது. இன்றைய காலச்சூழலுக்கு காந்தி தேவை.
அதைவிடவும் காந்தியம் தேவை. அதையும்விட காந்தியவாதிகள் தேவை. அடிப்படையில் நாம் அனைவருமே மற்றவர்களுக்
காகவே வாழ்கிறோம். ஆனால், இது குடும்ப அளவில் இருக்கும். இதை சமூக அளவில், மாநில அளவில், தேசிய அளவில், உலக
அளவில் விரிவாக்கம் செய்தால் அதுவே காந்தியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நூலாசிரியர் ஆசை ஏற்புரை யாற்றினார். நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் ம.சுசித்ரா தொகுத்து வழங்கினார். நிறைவாக, தலைமை வடிவமைப்பாளர் எம்.ராம்குமார் நன்றி கூறினார்.
புத்தகம் எங்கு கிடைக்கும்?
காந்தியின் அரிய 120 புகைப்படங்களுடன் 216 பக்கங்களில் வெளிவந்திருக்கும் ‘என்றும் காந்தி’ புத்தகத்தின் விலை ரூ.250. இப்புத்தகம் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள ‘இந்து தமிழ்’ அலுவலகங்களிலும், புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் இப்புத்தகத்தை மொத்தமாக வாங்க விரும்புவோர் 74012 96562 என்ற செல்போன் எண்ணிலும், பள்ளிகள், கல்லூரிகளில் புத்தகம் வாங்க விரும்புவோர் 9791089214 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.