கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 9-ம் பதிப்பு அறிமுக விழா வடசென்னை தமிழ்ச் சங்கம் சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது. அருகில் (இடமிருந்து) வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் இளங்கோ, எர்ணாவூர் நாராயணன், கலாநிதி வீராசாமி எம்.பி., முன்னாள் அமைச்சர் துரைமுருகன், கல்வியாளர் பாபு புருஷோத்தமன், மலையாள அறிஞர் வெங்கடாசலம், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் ஆகியோர்.படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

அதிகம் பேசும் மொழிகளை தமிழ் இலக்கியம் சென்றடைய வேண்டும்: இளம் தலைமுறையினருக்கு கவிஞர் வைரமுத்து அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை

தமிழ் இலக்கியங்கள், உலகில் அதிகமானோர் பேசும் ஸ்பானிஷ் மொழி, சீன மொழி உள்ளிட்ட மொழிகளை சென்றடைய வேண்டும் என்று இளம் தலைமுறையினருக்கு கவிஞர் வைரமுத்து அறிவுரை கூறியுள்ளார்.

வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 9-வது பதிப்பு அறிமுக விழா, வட சென்னை தமிழ்ச்சங்கம் சார்பில் தண்டை
யார்பேட்டையில் நேற்று நடந்தது. இதில், திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். ஏற்புரை வழங்கி வைரமுத்து பேசியது:

தமிழ் வெறும் மொழியல்ல. நாகரீகத்தின் அடையாளம். தமிழனாக பிறக்க நாம் கர்வப்பட வேண்டும். தமிழை எனது அதிகாரம் என கருதுகிறேன். 3 ஆயிரம் ஆண்டுகளாக இலக்கணம் மாறாமல் உள்ள ஒரே மொழி தமிழ் மட்டும் தான். இதை இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த நூலில் திருக்குறள் குறித்து குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நூல், கடவுளை மையமாக கொண்டு எழுதாமல், கீழ்நிலை மனிதர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி எழுதப்பட்டுள்ளது. அது தான் திருக்குறளின் சிறப்பு.

வருங்காலத்தில் ஸ்பானிஷ் மொழி தெரிந்தவர்தான் அமெரிக்க அதிபராக வரப்போகிறார். அதனால் உலகில் அதிகமானோர் பேசும் ஸ்பானிஷ் மொழி, சீன மொழி உள்ளிட்ட மொழிகளை தமிழ் இலக்கியங்கள் சென்றடைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இக்கால இளைய தலைமுறையினர் செய்ய வேண்டும்.

இந்திய நாகரீகத்தின் ஆதிகால முகவரியாக இருப்பதே தமிழர் நாகரீகம் தான். தமிழன் நாகரீகமாக இருந்த காலத்தில், வடக்கில் நாகரீகம் ஏது. இலக்கிய ஆதாரங்கள், இலக்கண செறிவுகள், வாழ்வியல் ஆதாரங்கள், கல்வெட்டுகள் வடக்கில் இல்லை. இந்தியாவுக்கு முன்னோடி நாகரீகம் தமிழர் நாகரீகம் தான். இந்திய நாகரீகம் என்பது வைகை நதிக்கரையில் இருந்து தான் தொடங்க வேண்டும். சிந்து நதிக்கரையில் இல்லை.

கீழடி நாகரீகம் நதிக்கரை நாகரீகம். வட இந்தியா, பனி படர்ந்த பிரதேசம். அங்கு சமவெளிகள் ஏற்படாது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் கடலில் கலக்கும்போது சமவெளிகளை உருவாக்குகின்றன. அப்படி தான் தஞ்சை, மதுரை சமவெளிகள் உருவாயின. அங்கு தான் நாகரீகங்கள் உருவாக முடியும். கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உள்நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. அதை புளோரிடாவில் ஆய்வு செய்யட்டும். இரு எண்ணும் ஒத்துபோகிறதா என்பதை பார்க்க வேண்டும். நிச்சயம், சிந்து சமவெளி நாகரீகத்தை விட, முந்தைய நாகரீகமாக தான் கீழடி நாகரீகம் இருக்கும்.

ஆங்கிலம், கணிப்பொறி ஆகியவற்றை தவிர்க்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, கல்வியாளர் பாபு புருஷோத்தமன், மலையாள அறிஞர் கே.எஸ்.வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன், சுதர்சனம் எம்எல்ஏ, வட சென்னை தமிழ்ச்சங்கத் தலைவர் எ.தா.இளங்கோ, செயலர் கு.பிருத்திவிராஜ், பொருளாளர் நா.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT