இ.ராமகிருஷ்ணன்
சென்னை
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அபராதத் தொகைக்கான ரசீதை அவர்களின் வீட்டுக்கே அனுப்பும் வகையில் சென்னையில் மெரினா, மதுரவாயலில் ரூ.24 கோடியில் அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2018-ல் 63,920 விபத்துகளில் 12,216 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் வரை 15,044 விபத்துகள் நடந்து 2,774 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் 7,580 விபத்துகளில் 1,260 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக, விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வெளிநாடுகள்போல, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை தானியங்கி கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் வீட்டுக்கே அபராத ரசீதை அனுப்பிவைக்கும் திட்டம், சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 5 முக்கிய சந்திப்புகளில் 58 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன.
இந்நிலையில், தற்போது மெரினா காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை ரூ.6.25 கோடியிலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து மதுரவாயல் சந்திப்பு வரை ரூ.18 கோடியிலும் அதிநவீன கேமராக்கள் சாலை நடுவே விரைவில் அமைக்கப்பட உள்ளன என்று சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் ஏ.அருண் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை வாகன எண்ணுடன் கேமராக்கள் படம் பிடிக்கும். இது 24 மணி நேரமும் செயல்படும்.
இதுகுறித்து சென்னையில் உள்ள போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியபோது, ‘‘கடந்த 2011-ம் ஆண்டில், விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் ஸ்பாட் அபராதம் வசூலிக்க ஆரம்பித்தோம். பின்னர், இ-சலான் இயந்திரங்களைப் பயன்படுத்தி அபராதம் வசூலித்தோம். கடந்த ஆண்டுமுதல் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசின் விருதும் கிடைத்தது. அடுத்த கட்டமாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை தானியங்கி கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்களது வீட்டுக்கே அபராத ரசீதை அனுப்பும் வகையில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், விதியை மீறக்கூடாது என்ற அச்ச உணர்வு, வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும். இதன்மூலம் விபத்துகள், உயிரிழப்புகளும் குறையும்’’ என்றனர்.