தமிழகம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்; அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்: மனுக்கள் நாளை பரிசீலனை

செய்திப்பிரிவு

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. கடைசி நாளான இன்று அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர் கள் மனு தாக்கல் செய்கின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி யில் காமராஜர் நகர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய இன்று (செப். 30) கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (அக். 1) நடக்கிறது. அக்டோபர் 3-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதிமுக வேட்பாளர்கள் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் (விக்கிரவாண்டி), ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் (நாங்குநேரி), திமுக வேட்பாளர் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் (நாங்குநேரி) ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதுவரை விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.கந்தசாமி மற்றும் 7 சுயேச்சைகள், நாங்குநேரி தொகுதியில் 12 பேர் என மொத்தம் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மும்முனைப் போட்டி

இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக கூட்டணி, நாம் தமிழர் வேட்பாளர்களிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிக்குழுவை அறிவித்து பணிகளைத் தொடங்கியுள்ளன. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். அவர் அக்டோபர் 3-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக வுக்கு தேமுதிக, தமாகா, சமக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுகவுக்கு ஆதரவளிப்பது குறித்து பாஜக மேலிடம் முடிவெடுக்கும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மதிமுக, விசிக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி யில் திமுக கூட்டணியில் காங்கிரஸும், அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின் றன.

SCROLL FOR NEXT