தாயை செருப்பால் அடித்துவிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மனைவியுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு நின்ற மகனுக்கு முன்ஜாமீன் அளித்ததோடு நூதனமான தண்டனையும் அளித்தார் நீதிபதி.
வேலூர் மாவட்டம், சலவன் பேட்டையில் வசித்து வருபவர் ஸ்ரீலதா (75). இவரது மூத்த மகன் ஸ்ரீதர். இவர் தனது மனைவியுடன் தாயாரிடம் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து தாயை செருப்பால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தாய் ஸ்ரீலதா வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதரும், அவரது மனைவி காயத்ரியும் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு அக்டோபர் 4-ம் தேதிக்குள் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், இரண்டு வாரங்கள் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.