தமிழகம்

பாரதியின் பாடல்களைக் கற்றுக் கொள்ளும் பெண்களுக்கு கோழைத்தனம் வருவதற்கு வாய்ப்பில்லை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி

பாரதியின் பாடல்களைக் கற்றுக் கொள்ளும் பெண்களுக்கு கோழைத்தனம் வருவதற்கு வாய்ப்பில்லை என தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் மாவட்ட பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய பாரதி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், "என்னைப் போன்ற பெண்கள் மேடைகளில் நின்று பேசுவதற்குக் காரணம் பாரதிதான்.

"வீழ்வேன் என நினைத்தாயோ..." என நான்காம் வகுப்பில் நான் படித்த பாடல்தான் என்னை இந்த அளவுக்கு உயர வைத்துள்ளது, யார் வீழ்த்த நினைத்தாலும் எழுவோம் எழுவோம்.

கடலை சங்குக்குள் அடைத்துவிட முடியாது என்பதுபோல் பாரதி புகழை சில மணிநேரத்தில் சொல்லிவிட முடியாது" என்றார்.

மேலும் பேசும்போது, "அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதி பாடல் எந்த பெண்களின் மனதிலும் பதிந்து விட்டால் அவர்கள் அச்சமின்றி வாழ முடியும்.

பெண்களுக்குப் பல்வேறு வகையில் முக்கியத்துவம் அளித்த முண்டாசு கவிஞர் பாரதி, தான் ஆரம்பித்த பத்திரிக்கைக்கு சக்கரவர்த்தினி என பெயரிட்டு அதன் மூலம் முதன்முதலாக பெண்களுக்கு மூடி சூடியவர் பாரதி என அவர் குறிப்பிட்டார்.

பாரதியாரின் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று கூறியவர், மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் எல்லோரும் சமம் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

எல்லா சக்திகளும் பெண்களிடம் உள்ளன எனவே எந்தத் தடைகள் வந்தாலும் அதனை நசுக்கி உலகில் பாரதி கண்ட பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும்.

பாரதி கண்ட கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் நாட்டு மக்கள் அனைவருக்கும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் கனவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பாரதியை பார்த்தவுடனேயே சக்தி வரும் எனவே இதுபோன்ற பாரதியைப் பற்றிய பெண்களுக்கு எடுத்துச் சொல்லும் பல மேடைகள் அமைக்கப்படவேண்டும்.

தாயாக, தாரமாக, தங்கையாக, தெய்வமாக அடையாளபடுத்தப்பட்ட பெண்களுக்கு எல்லா சக்திகளும் உள்ளன. எனவே துணிச்சலாக வாழ்வதுதான் வாழ்க்கை. பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க கூடாது. பாரதி சொன்னது போன்று வீழாமல் எழவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பாரதி வேடமணிந்த சிறுவர்கள் ஆளுநரை விழா மேடைக்கு அழைத்து வந்தனர். தமிழ் பேச்சாளர் இன்னிசை சொல்லரசி வாசுகி மனோகரன் பாரதியின் பார்வையில் பெண்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பாரதி தமிழ் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ரமேஷ்,ஜெயக்குமார்,முத்துகுமார்,ஜெயராமன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

-எஸ்.கோமதிவிநாயகம்

SCROLL FOR NEXT