தமிழகம்

கொடைக்கானலில் கொட்டிய மழை: அருவிகளில் வெள்ளப்பெருக்கு; முழு கொள்ளளவை எட்டிய ஏரி

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் பாம்பார்புரம் நீர்வீழ்ச்சி, வெள்ளி நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டியது.
கொடைக்கானல் ஏரி முழு கொள்ளவான 28 அடியை எட்டி நிரம்பி வழிந்தது. சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
நேற்று பகல் 1.30 மணி முதல் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி வரை 38 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

தொடர்ந்து இரவு வரை மழை பெய்தது. கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளிநீர் வீழ்ச்சி, பாம்பார்புரம் நீழ்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டியது.

உகார்த்தே நகர் பகுதியில் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
தொடர் மழையால் கொடைக்கானல் ஏரி முழு கொள்ளவான 28 அடியை எட்டியது.

ஏரியில் இருந்து அதிகநீர் வெளியேறுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கைவிடுத்தனர். நேற்று பகலில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT