சென்னை
ஜெயகோபால் கைது செய்யப்பட்டது சற்று ஆறுதலை அளிப்பதாக, சுபஸ்ரீயின் தாயார் கீதா தெரிவித்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது அலட்சியமாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்கிற விபத்துப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு போலீஸார் தேடினர். ஆனால் அவர் தலைமறைவானார். இந்நிலையில் அவர் நேற்று (செப்.27) கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, சுபஸ்ரீயின் தாயார் கீதா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "ஜெயகோபாலைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், இப்போது கைது செய்த காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தாமதம் ஆனாலும் இப்போது கைது செய்திருக்கின்றனர்.
இது எங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது. எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த மக்கள், திரைத்துறையினர் என அனைவருக்கும் நன்றி. அவர்களின் ஆதரவு இருந்தால்தான் சுபஸ்ரீக்கு நீதி கிடைக்கும். குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டுமோ, அது சட்டப்படி நடக்கும் என எதிர்பார்க்கிறேன்," என தெரிவித்தார்.