வி.சீனிவாசன்
தமிழகத்தில் பருவகால மாற்றம் ஏற்படும்போதெல்லாம் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா, ஸ்வைன் ஃபுளு என எண்ணற்ற நோய் கிருமிகள் படையெடுப்பால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். தற்போது, தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் ‘டிப்தீரியா’ எனும் தொண்டை அடைப்பான் நோய் கிருமியின் தாக்கத்தால் குழந்தைகளும், முதியவர்களும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தடுக்க மாநிலம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன..
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தலைதூக்கியுள்ள ‘டிப்தீரியா’ பிடியில் இருந்து தற்காத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சேலத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் எஸ்.பாலாஜி கூறியது:
இந்த நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே’ என்ற கிருமிகளால் காற்றின் மூலம் 16 வயது வரையிலான குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிகளவு பரவி வருகிறது. நான்கு வகைகளான இக்கிருமியில் 'கிரேவிஸ்' என்ற கிருமி ஆபத்தானது. இந்தக் கிருமிகள் தொண்டையை தாக்குவதன் மூலம் சுவாசத்தையும் உணவு விழுங்குவதையும் தடுப்பதால் ‘தொண்டை அடைப்பான்’ என்றழைக்கப்படுகிறது.
அறிகுறியும், விளைவும்
இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தும்முவது, இருமுவது, காறி உமிழ்வது, மூக்கைச் சிந்துவது உள்ளிட்ட காரணிகளால் கிருமிகள் காற்றில் பரவி, மற்றவர்களுக்கு தொற்றிக்கொள்கிறது. ‘டிப்தீரியா’ கிருமி பரவிய இரண்டு முதல் ஏழு நாட்களுக்குள் நோயின் வீரியம் அதிகரிக்கும். சளி, காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, தொண்டை மேல் அண்ணத்தில் வெள்ளை நிற படிவம் பரவுதல், கழுத்துப்பகுதி வீக்கம், நெறி கட்டுதல் ஆகியவை நோயின் முக்கிய அறிகுறிகள். சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். சளியில் ரத்தம் வெளியேறுவதும் உண்டு. முறையான சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய் வீரியத்தை குறைத்து, தற்காத்துக் கொள்ள முடியும். சிகிச்சை எடுக்காமல் அலட்சியம் காட்டினால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
தடுப்பு நடவடிக்கை
‘டிப்தீரியா’ நோய் பாதித்தவர்கள் இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையை அவசியம் பயன்படுத்த வேண்டும். நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். காற்றின் மூலம் நோய் கிருமி பரவும் தன்மை கொண்டதால், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், இந்த நோய் பாதித்தவர்களிடம் இருந்து விலகி இருப்பது அவசியம். ஒருவருக்கு நோய் பாதிப்பு இருந்தால், அவர்களின் குடும்பத்தினர், பள்ளிக்கூடத்தில் உடன் படிக்கும் மாணவர்களுக்கு தொற்று கிருமி பரவியுள்ளதா என்று கண்காணித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி அவசியம்
குழந்தை பிறந்த ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களில் ஹெபடைட்டிஸ் பி, டிப்தீரியா, கக்குவான் இருமல், ரண ஜன்னி, மூளைக்காய்ச்சல் பாக்டீரியா ஆகிய ஐந்து நோய்களைத் தடுக்கும் ‘பென்டாவேலன்ட்' தடுப்பூசி போடவேண்டும். 16 மற்றும் 24-ம் மாதங்களில் டிப்தீரியா, ரண ஜன்னி, கக்குவான் இருமலுக்கான டி.டி.பி முத்தடுப்பு ஊசி போடவேண்டும். ஐந்து மற்றும் பத்து வயதில் ரண ஜன்னி, டிப்தீரியா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். குழந்தை பிறந்ததில் இருந்து தடுப்பூசி அட்டவணையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும். கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் போடவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம்.
நோய் பரவிவரும் இக்காலக்கட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் ‘டிப்தீரியா’ நோய் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ளலாம் என்றார்.