தமிழகம்

இதயம் காக்க 5 எளிய வழிகள்: மூத்த இதய மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு விளக்கம் 

செய்திப்பிரிவு

சென்னை

உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மன அமைதி, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இதய நலன் காக்கலாம். இதய நோய் வராமல் தடுக்கலாம் என்று மூத்த இதய மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக இதய தினத்தை முன்னிட்டு இதயத்தால் இணைவோம்- இதயம் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை டாக்டர் ஜி.எஸ். ஹார்ட் ஃபவுண்டேஷன் சென்னையில் இன்று நடத்தியது.

இதில் டாக்டர் ஜி.எஸ். ஹார்ட் ஃபவுண்டேஷன் இயக்குநர் டாக்டர் செங்கோட்டுவேலு, சிருஷ்டி ஏ.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.முருகநாதன், நடிகர் சிவகுமார், ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்வில் நடிகர் சிவகுமார் பேசும்போது, ''தினமும் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அப்போது அருகில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. அமைதியாக நடக்க வேண்டும். பஜ்ஜி, வடை போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் இரண்டு முறை மலம் கழித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்'' என்று குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா பேசும்போது, ''வாட்ஸ் அப்பில் உடல்நலம் தொடர்பான நிறைய மெசேஜ்கள் வருகின்றன. வழக்கம்போல் அதை மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டு நம் வேலையைப் பார்க்கிறோம். உண்மையில் அதில் ஒரு சதவீதமாவது நாம் பின்பற்றுகிறோமா என்று யோசிக்க வேண்டும். ஒரு நாள் திடீரென்று என் இடது கையில் வலி பின்னி எடுத்தது. நீண்ட நேரம் வலி இருந்ததால் டாக்டர் செங்கோட்டுவேலிடம் ஆலோசனை கேட்டேன். பரபரப்பான பணிச் சூழலிலும் எனக்கு இருக்கும் பிரச்சினையை இனம் கண்டு சிகிச்சை அளித்தார். அதற்குப் பிறகு உணவுப் பழக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளில் நான் மாற்றங்கள் செய்தேன். ருசிக்குச் சாப்பிடுவதைக் காட்டிலும் பசிக்கு மட்டும் சாப்பிட்டேன். அப்போது எனது உடல் இலகுவாக, சரியாக இருந்தது. அதிக மகிழ்ச்சியை உணர்ந்தேன். நடைப்பயிற்சி என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் ஆனது அல்ல, இதயம் காக்க நடைப்பயிற்சியே நல்ல வழி. நாம் கடைபிடிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. சில எச்சரிக்கை மணிகள் அடிக்கும்போது நாம் விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்'' என்றார்.

டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு பேசும்போது, ''உலகத்தில் 80% மரணங்கள் இதய நோய்களாலேயே ஏற்படுகிறது. இந்தியாவில் 30% பேர் இதய நோயால் மரணம் அடைகின்றனர். ஆனால், 80% இதய நோய்களைத் தடுக்க முடியும் என்பதுதான் உண்மை. பெற்றோருக்கு இதய நோய் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் இதய நோய் வரலாம். அது மரபணுப் பிரச்சினை. அதனைச் சரிசெய்வது கடினம். ஆனால், வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கவழக்க மாற்றங்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், போதிய உடற் பயிற்சியின்மை போன்றவை இதய நோய்க்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இப்போது முதியவர்கள் மட்டுமில்லாது இளைஞர்களுக்கும் இதய நோய் ஏற்படுகிறது. உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மன அமைதி, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இதயம் காக்கலாம். இதய நோய் வராமல் தடுக்கலாம்.

ஆரோக்கியமானதை மட்டுமே சமைத்துச் சாப்பிட வேண்டும், புகைப்பிடித்தலை விட வேண்டும், மருத்துவர்கள் நோயாளிகள் புகைப்பிடிப்பதைக் கைவிடவும் கொழுப்பு உணவுகளைக் குறைக்கவும் உதவ வேண்டும் போன்ற உறுதிமொழிகளை இதய நலன் காக்க எடுத்துக்கொள்வது அவசியம்.

10 வருடங்களுக்குப் பிறகு ஒருவர் இதய நோயால் பாதிக்கப்படுவார் என்று அவரின் வாழ்க்கை முறையை வைத்துக் கணிக்கவும் முடியும். அதை இப்போதே உணர்ந்து தடுக்கவும் முடியும். நவீன தொழில்நுட்ப மருத்துவத்தால் இதய நோயைக் குணப்படுத்தலாம். ஆனால், குணப்படுத்துவதில் மருத்துவரின் பங்கு 20 சதவீதம் என்றால் நோயாளியின் பங்கு 80 சதவீதம் உள்ளது'' என்றார்.

டாக்டர் ஏ.முருகநாதனும் இதயம் காக்கும் 5 எளிய வழிகளை பஞ்ச தந்திரங்களாகக் கருதி செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

படங்கள்: எல்.சீனிவாசன்

SCROLL FOR NEXT