விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு விக்கிரவாண்டியில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக காணை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டார். சென்னையில் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர் சண்முகத்துடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் மாலை 4.35 மணிக்கு விக்கிரவாண்டி தொகுதிக்குத் திரும்பிய அவருக்கு வடக்கு பைபாஸ் முனையில் கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
அப்போது அங்கிருந்த விக்கிரவாண்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் சிந்தாமணி வேலுவை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதால் அவர் தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் வடக்கு பைபாஸ் முனையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஊர்வலமாக விக்கிரவாண்டிக்குள் சென்றார். அப்போதுதான் உடன் ஒன்றியச் செயலாளர் சிந்தாமணி வேலு இல்லை என்பதை உணர்ந்த அதிமுகவினர் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வந்து ஊர்வலத்தைத் தொடர்ந்தனர் எனத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனின் மகன் பிரபாகரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "அப்படியெல்லாம் இல்லை. அவரும் ஊர்வலத்தில் பங்கேற்றார்" என்று முடித்துக்கொண்டார்.
மேலும் விவரம் அறிய ஒன்றியச் செயலாளர் சிந்தாமணி வேலுவைப் பலமுறை தொடர்புகொண்டும் அவரின் கருத்தை அறிய முடியவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக வேலு அறிவிக்கப்பட்ட பின்னர் விக்கிரவாண்டி தொகுதி அப்போது கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வேலு மறைந்த திமுக எம்எல்ஏ ராதாமணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது அவர் வாய்ப்பு கேட்டும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.