தமிழகம்

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி மீண்டும் சம்மன்

என்.கணேஷ்ராஜ்

தேனி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்ட நிலையில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டீன் ராஜேந்திரனும், கல்லூரியின் துணை முதல்வர் எழிலரசனும் மீண்டும் ஆஜராகயிருக்கின்றனர்.

முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார், டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ் ஆகியோர் எட்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின்போது வெங்கடேசன் ஆள்மாறாட்டக் குற்றத்தை ஒப்புக் கொண்டார். மகன் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையால் ஒன்றுமறியாத மகனை சிறைக்கு அனுப்ப தானே காரணமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனை தேனி சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மும்பையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின் மூலம் முறைகேடு நடந்ததாக அவர் உறுதிப்படுத்தியதால் சிபிசிஐடி சிறப்புப் படை ஒன்று மும்பை விரைவதாகவும் அவர்கள் கூறினர்.

கேரளத்தில் இருவர் கைதா?

இதற்கிடையில் கேரள மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டுக்காக உதவிய இரண்டு இடைத்தரகர்கள் கேரளாவில் பிடிப்பட்டதாக வெளியான தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்ட சிபிசிஐடி அதிகாரிகள் கேரளாவுக்கு அதிகாரிகள் சென்றிருப்பதாக மட்டும் கூறினர்.

மேலும் தமிழகம் முழுவதும் இதுபோன்று 4 பேர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதால் சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகள் மூலம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

தாயார் எங்கே?

உதித் சூர்யாவின் தாயார் கயல்விழி எங்கே சென்றார் என்ற கேள்விக்கு, "அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டதால் அவரை நாங்கள் விடுவித்துவிட்டோம். அவர் சென்னைக்கே சென்றுவிட்டாரா? இல்லை உள்ளூரில் யாரேனும் உறவினர் வீட்டில் உள்ளாரா? என்பது தெரியாது" என்று அதிகாரிகள் கூறினர்.

சீனாவில் படித்தாரா உதித் சூர்யா?

மாணவார் உதித் சூர்யா கடந்த ஆண்டு சீனாவில் வெறும் 20 நாட்கள் மட்டுமே தங்கியிருந்து மருத்துவப் படிப்பைப் பயின்றதாக அவரின் உறவினர்கள் சிலர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என்பதை சிபிசிஐடி போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.

SCROLL FOR NEXT