நாங்குநேரி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரிக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவின் வெ.நாராயணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 20 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கோரிக்கை என்ன?
இது குறித்து கிராம மக்கள், "குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் வாதிரியான் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவே 20 கிராம மக்கள் சேர்ந்து இன்று முதல் எங்கள் ஊர்களில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்" என்றனர்.