விழுப்புரம்
விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் ஊத்துக்காட்டு ரேணுகை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் பொதுவாக திருவிழா நடத்தப்பட்டு வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு குறிப் பிட்ட ஒரு சமுதாயத்தினர், தனியாக விழா நடத்துவதாக நோட்டீஸ் அச்சடித்ததால் பிரச்சினை உருவா னது. இது குறித்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது. தனிப்பட்ட சமுதாயத்தினர் விழாவை நடத்தாமல் பொதுவாக நடத்த முடிவு செய்து திருவிழா நடத்தப்பட்டது. இருப்பினும், அந்தச் சமுதாயத்தினர், 'கோயில் தங்களுக்குச் சொந்தமானது' எனக்கூறி மீண்டும் தனியாக திருவிழா நடத்த முயன்றால் கடந்தாண்டு மீண்டும் அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் வைகாசி மாதம் வரை ஒரு தரப்பினரும், ஆடி மாதம் வரை ஒரு தரப்பினரும் திருவிழாவை நடத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோயிலைச் சொந்தம் கொண்டாடிய சமூகத்தினர் கடந்த வைகாசி மாதம் திருவிழாவை நடத்தி முடித்தனர். ஆடி மாதம் மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்துவதற்கு கோயில் சாவியை தராமல் வைத்திருந்தனர்.
இது குறித்து அந்த தரப்பினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டு, ஆடி மாதம் திருவிழாவுக்கு கோயில் சாவி, பொருட்களை ஒப்படைக்க வேண்டும்; திருவிழா முடிந்த பிறகு கோயில் சாவி, பொருட்களை விக்கிரவாண்டி வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் படி ஆடிமாத திருவிழா முடிந்து கோயில் சாவியை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சில நாட்கள் கழித்து மீண்டும் பிரச்சினை கிளம்ப, ஒரு தரப்பினர் கோயிலை பூட்டினர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. விழுப்புரம் தாலுகா போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.
இந்நிலையில் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளதால் வருவாய்த்துறை ஆய்வாளர் விஜயன் தலை மையிலான அதிகாரிகள் நேற்று கோயிலை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்.