வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர்
தள்ளாத வயதிலும், தன்னம்பிக்கை யுடன் மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த 113 வயது முதியவர் முகமது அபுகாசிர்.
தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி, ஆடக்காரத் தெருவில் சிறிய வீட்டில் வசித்து வரும் இவர் 113 வயதாகும் முதியவர் என்றால் பலரும் நம்புவதற்குத் தயங்குகின் றனர். பர்மாவைச் சேர்ந்த இவர், அங்கு நடந்த போரைத் தொடர்ந்து கடந்த 1956-ல் தனது 50-வது வயதில் தமிழகத்துக்கு வந்தார்.
அப்போது நண்பர் ஒருவரின் உதவியுடன் மிட்டாய் வியாபா ரத்தை தொடங்கினார். அன்றிலி ருந்து இன்று வரை மிட்டாய் வியாபாரம் தொடர்கிறது. தள்ளாத வயதிலும் தனி நபராக பல்வேறு இடங்களுக்கு நடந்தே சென்று மிட்டாய் விற்பனை செய்து, உழைத்து பிழைத்து வருகிறார்.
இஞ்சி மிட்டாய், குளுகோஸ் மிட்டாய், தேங்காய் மிட்டாய் என 3 வகை மிட்டாய்களையும் வீட்டில் தனி ஆளாக தயார் செய்து வருகிறார். மிட்டாய் வியாபாரம் மூலம் தினமும் 150 ரூபாய் வரை வருவாய் ஈட்டி வரும் இவர், தனது செலவு, வீட்டு வாடகை ஆகியவற்றுக்கு மேல் கிடைக்கும் பணத்தைச் சேமித்துவைத்து, வறுமையில் வாடுவோர் உதவி கேட்டு வந்தால் அவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.
மனைவி, குழந்தைகளை இழந்தேன்
இதுகுறித்து முகமது அபுகாசிர் கூறியதாவது: பர்மாவில் நடந்த போரின்போது, என் மனைவி மற் றும் 2 மகன்கள், ஒரு மகளை என் கண்முன்னே இழந்தேன். அப் போது எனக்கு 50 வயது. பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் சென்னைக்கு வந்த நான், சென்னை மற்றும் புதுச்சேரியில் ஒரு வருடம் சிறு சிறு வேலைகளைச் செய்தேன். அதன் பிறகு தஞ்சாவூருக்கு வந்து, டீக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன்.
அதன் பிறகுதான் நண்பர் ஒருவர் கொடுத்த ஆலோசனைப்படி, மிட்டாய் தொழிலுக்கு மாறினேன். காலையில் எழுந்தவுடன் இஞ்சி, குளுக்கோஸ், தேங்காய் மிட்டாய் களைத் தயார் செய்யத் தொடங்கி விடுவேன். முன்பெல்லாம் நானே தான் எல்லா வேலைகளையும் செய்தேன். தற்போது அதிக வயதாகிவிட்டதால் தேங்காய்ப் பூவை துருவி எடுப்பது சிரமமாக உள்ளது. அதனால் சம்பளம் கொடுத்து, பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணை உதவிக்கு வைத்திருக்கிறேன்.
மிட்டாய்கள் தயாரான பிறகு மூங்கில் தட்டில் வைத்துக் கொண்டு மதியத்துக்கு மேல் விற்பனைக்குச் சென்று விடுவேன். தெருத்தெருவாக நடந்து சென்று விற்பேன். இஞ்சி மிட்டாய் சாப்பிடுவதால் பித்தம்- மயக்கம் இருக்காது, தேங்காய் மிட்டாய் சாப்பிட்டால் வயிற்றில் புண் இருந்தால் ஆறிவிடும், குளுக் கோஸ் மிட்டாய் சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கும் எனக் கூறி விற்பனை செய்வேன்.
என்னைப் பொறுத்தவரை பொய் பேசக்கூடாது, யாரிடமும் கையேந்தக் கூடாது. யாரையும் கெடுக்காமல் உழைத்து வாழ வேண்டும் என்பதை கடைபிடித்து வருகிறேன். இன்னும் நான் கண்ணுக்கு கண்ணாடி போட்ட தில்லை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் எனக்கு இல்லை.
உழைத்து வாழ்வதால் உடலிலும், மனதிலும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன் என்று கூறிய முகமது அபுகாசிர், "எனக்குன்னு ஒரு ரேஷன் கார்டு இல்லை என்பதைத் தவிர குறை ஏதும் இல்லை. ரேஷன் கார்டு கேட்டு பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ரேஷன் கார்டு இல்லை என்பதால் அரசு கொடுக்கிற அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள், உதவித்தொகை என எதுவும் எனக்கு கிடைப்பதில்லை" என்றார் சற்றே வருத்தத்துடன்.