புதுடெல்லி
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 26,709 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மத்திய ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 47-வது அமர்வு, மாநிலங்களில் மொத்தம் ரூ.4,988 கோடி முதலீட்டில் 1.23 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான 630 கருத்துருக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,805 கோடி. இந்த ஒப்புதலையடுத்து, பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 90 லட்சத்திற்கும் கூடுதலாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1.12 கோடியாகும்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உட்பட பத்து மாநிலங்கள் பங்கேற்றன. இதில் தமிழ்நாட்டில் 26,709 வீடுகளை, ரூ.939 கோடியில் கட்டுவதற்கான 158 கருத்துருக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.400.64 கோடியாகும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1.43 லட்சம் கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதில் ரூ.57,758 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் அறிவித்த திட்டம் 'அனைவருக்கும் வீடு திட்டம்' என்னும் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்'. நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு பிரிவுகளாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்
ஆவாஸ் யோஜனா திட்டப்படி, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் மிகாமல்), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம்-ரூ.6 லட்சம் வரை) இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். அதே நேரத்தில், நடுத்தர வருமானப் பிரிவினர் - 1 (ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் - ரூ.12 லட்சம் வரை), நடுத்தர வருமானப் பிரிவினர் - 2 ( ரூ.12 லட்சம் - ரூ.18 லட்சம் வரை) ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.