திருநெல்வேலி
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 32 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். இதைக் கணக்கில் கொண்டு அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே தங்கள் வேட்பாளராக பிரதான கட்சியினர் நிறுத்தி வருகிறார்கள்.
இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரதான கட்சியினர் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகிறார்கள். அதிமுக தனது கட்சி வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் என்பவரை அறிவித்திருக்கிறது. இவர் இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
எதிரணியில் பிரதானமாக காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார். அக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தற்போது முட்டிமோதும் பிரபலங்களும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரே நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளது.
இந்தத் தேர்தலில் மட்டுமின்றி கடந்த பல சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வெற்றிபெற்ற பலரும் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர்.
இவ்வாறு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளராக பிரதான கட்சிகள் தேர்ந்தெடுக்கக் காரணம், இத்தொகுதியில் நாடார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். மொத்தமுள்ள 2,56,414 வாக்காளர்களில் 30%க்கு மேல் நாடார் சமூக வாக்குகள் அதிகம் உள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக 20%க்கும் மேல் தாழ்த்தப்பட்ட சமூக வாக்குகளும், 17%க்கு மேல் தேவர் சமூக வாக்குகளும், 12%க்கு மேல் யாதவ சமூக வாக்குகளும் உள்ளன.
சாதி வாரியான இந்தப் புள்ளிவிவர கணக்கீடுகளை முன்வைத்தே வேட்பாளர் தேர்விலும் பிரதான கட்சிகளின் கவனம், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நோக்கியே இருக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும் அதுவே நடந்தேறி வருகிறது.