கோப்புப்படம் 
தமிழகம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு: பார்வையற்றவர்கள் தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிப்பதை உறுதி செய்க; உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை

நாளை தொடங்க உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்கும், பார்வையற்ற மாற்றத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு 2,144 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நாளை (செப்.27) தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இத்தேர்வில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்வு எழுதத் தகுதியான உதவியாளர்களை நியமிக்கக் கோரி பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மணிகண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, பார்வையற்றவர்கள் தேர்வு எழுதும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகளின் படி முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (செப்.26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆசிரியர் தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவர் எனவும், கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்து அதுதொடர்பாக சுற்றிக்கையைத் தாக்கல் செய்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாற்றத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத உதவியாளர்களை நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தேர்வின் போது, இந்த வசதிகள் பார்வையற்றவர்களுக்கு வழங்காவிட்டால் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை முறையிடலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

SCROLL FOR NEXT