சென்னை
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழத்தில் இன்று லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் எப்படி?
சென்னையைப் பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்க, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆந்திராவில் மேற்குக் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி, கர்நாடகாவை நோக்கி நகர்ந்துள்ளது என்றும் அதனால் மழையின் அளவு படிப்படியாகக் குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.