செய்தியளர்களிடம் பேசும் சீதாராம் யெச்சூரி 
தமிழகம்

கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு திட்டமே நிகழ்ச்சி நிரலில் இல்லை: சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி

கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு என்ற திட்டமே எங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை எனவும் இருதரப்பும் சந்தித்துக் கைகுலுக்குவதால் இணைந்து விட்டதாக அர்த்தமில்லை என்றும் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.26) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது. ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் கூட விற்காமல் சரிவைச் சந்தித்துள்ளது. வடநாட்டில் டீ, பிஸ்கெட் சாப்பிட்டு வாழ்வோரும் அதிகமுண்டு. ஏனெனில் சாதாரண மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. அதை உருவாக்க நடவடிக்கை எடுக்காமல் கார்ப்பரேட், ஏற்றுமதியாளர்களுக்கு நிதி உதவியை மத்திய அரசு தந்துள்ளது.

எந்த நிதி தந்தாலும் ஏற்றுமதி உயராது. மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் பொருளாதார மந்த நிலை மாறும். பணக்காரர்களுக்குத் தருவதற்குப் பதிலாக நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியில் செய்திருக்கலாம். இதை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து வரும் அக்டோபரில் 10 முதல் 16 வரை போராட்டத்தில் நாடு முழுவதும் ஈடுபட உள்ளோம். அதில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், அமைப்புகளும் பங்கேற்பது அவசியம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு என்ற திட்டமே எங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை. நாங்கள் மக்கள் மக்கள் பிரச்சினைகளில் இணைந்து பணியாற்றுகிறோம். தேர்தலிலும், போராட்டங்களிலும் இடதுசாரி இயக்கங்களை வலுப்படுத்துதலிலும் இணைந்து செயல்படுகிறோம். அதே நேரத்தில் இருதரப்பு தலைவர்கள் சந்தித்துக் கைகுலுக்குவதால் இணைந்து விட்டதாக அர்த்தமில்லை. இதைத் தவறாக நினைக்கின்றனர்".

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT