தமிழகம்

பகவத் கீதையைக் கற்பிக்க எதிர்ப்பா?- எச்.ராஜா கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளில் பகவத் கீதை அறிமுகம் செய்யப்பட்டதை ஆதரித்துள்ளார் எச்.ராஜா.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பில் பகவத் கீதை, தத்துவவியல் ஆகிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் யோகா, பல்வேறு உபநிடதங்கள், உலகம் தோன்றியது எப்படி, ஆசிரியர் மற்றும் மாணவருக்கு இடையேயான உறவு, பேச்சுக்கும் சுவாசத்துக்குமான புரிதல், பகவத் கீதையில், மனதை வெற்றி கொள்வது குறித்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்ன அறிவுரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாடத் திட்டத்தில் உள்ளன.

பாடத்திட்டம் சாரா கூடுதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக தத்துவவியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழும அறிவுறுத்தலின்படியே இப்படிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொறியியல் படிப்பில் பகவத் கீதையும் தத்துவவியலும் எதற்கு என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''பகவத் கீதையைக் கற்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்துக்கு உரியது.

மார்க்ஸின் புத்திரர்களுக்கும் கால்டுவெல்லின் புத்திரர்களுக்கும் இந்தியா தொடர்பான அனைத்தையும் எதிர்ப்பது வழக்கமாகி விட்டது. தங்களின் கொள்கையில், எல்லை தாண்டிய பகுதிகள் மீது அதிகமான விசுவாசத்தை காட்டுகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது'' என்று தெரிவித்துள்ளார்.

கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியையும் கால்டுவெல் பிரிட்டனையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.ராஜாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்ட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT