பந்தலூர்
கூடலூர் எம்எல்ஏவை நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி எம்எல்ஏவாக திமுகவைச் சேர்ந்த திராவிடமணி உள்ளார். இவரது வீடு பந்தலூர், எம்ஜிஆர் நகரில் உள்ளது. திராவிடமணி எப்போதும் காலை ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு அப்படியே பொதுமக்களைச் சந்தித்து வருவது வழக்கம். அதேபோல இன்று காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி சென்றார்.
பந்தலூர் பஜார், சிவில் சப்ளை குடோன் அருகே வரும்போது ஒரு தெரு நாய் அவரை விரட்டியுள்ளது. நாய்க்கடியிலிருந்து தப்பிக்க திராவிடமணி வேகமாக நடந்துள்ளார். ஓடி வந்த நாய் அவர் மீது பாய்ந்து கடித்தது. இதில், அவரது தொடையில் பல் இறங்கி, சதையைப் பதம் பார்த்தது. வலியால் துடித்த எம்எல்ஏவை அப்பகுதி மக்கள் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைச் சோதித்த டாக்டர் அவருக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசியைப் போட்டார். சிகிச்சைக்குப் பின்னர் திராவிடமணி வீடு திரும்பினார்.
பந்தலூர் பகுதிகளில் பல தெரு நாய்கள் வலம் வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு முதியவரை 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்தன. அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சுவர் மற்றும் கேட் இருந்ததால் அவர் நாய்களிடமிருந்து தப்பினார். நாய்கள் சூழ்ந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரல் ஆனது.
பந்தலூர் பகுதியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது எம்எல்ஏவை நாய் கடித்துள்ளது. இதற்குப் பிறகாவது நெல்லியாளம் நகராட்சி நாய்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணுமா? என்பதுதான் பந்தலூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.