தேனி
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சர்ச்சையில் சிக்கிய தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் மற்றும் தாயார் கயல்விழி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவரது மகன் உதித் சூர்யா, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வில் ஆள்மாறாட் டம் செய்திருப்பது மருத்துவக் கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து தேனி மாவட்டத் தில் உள்ள க.விலக்கு காவல் நிலையத்தில் மாணவர் உதித் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், உதித் சூர்யா மீது கூட்டுச்சதி 120 (பி), மோசடி செய்தல் (419), ஏமாற்றுதல் (420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் குடும்பத்து டன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள மாணவரின் வீடு உட்பட பல இடங்களில் தேனி மாவட்ட தனிப்படை போலீஸார் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உதித் சூர்யா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை தள்ளிவைத்தது.
இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை கடந்த 22-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, போலீஸ் டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். முதல்கட்டமாக, தலைமறைவாக இருக்கும் உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிடிக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உதித் சூர்யா திருப்பதியில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலையிலேயே திருப்பதி சென்ற சிபிசிஐடி போலீஸார், திருப்பதி மலை அடிவாரத்தில் ஒரு ஹோட்டலில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். 3 பேரையும் பிற்பகலில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் தேனி மாவட்ட சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர், அங்கிருந்து அவர்கள் தேனிக்கு வேன் மூலம் அழைத்துவரப்பட்டனர். சுமார் 7 மணி நேரப் பயணத்துக்குப் பின் உதித் சூர்யா மற்றும் குடும்பத்தினர் தேனிக்கு அழைத்து வரப்பட்டு தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தேனி சிபிசிஐடி டிஸ்பி காட்வின் ஜெதீஷ், விசாரணை, அதிகாரி சித்ரா தேவி, சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் இன்று உதித் சூர்யா மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் சென்னையில் இருந்து தேனி வந்து கொண்டிருக்கிறார்.
இன்று காலை தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் ஆகியோர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
விசாரணையைத் தொடர்ந்து மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரின் பெற்றோர் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.