தமிழகம்

குறைந்து வருகிறதா கருத்தரிப்பு?

செய்திப்பிரிவு

தம்பதியினரிடையே கருத்தரிப்பது குறைந்து வரும் சூழல், கோவையில் இது வேகமாக அதிகரித்து வருகிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது தொடர்பாக கோவை நோவா ஐ.வி.எஃப். ஃபெர்ட்டிலிட்டி கருத்தரிப்பு மைய ஆலோசகர் டாக்டர் லதாவிடம் பேசினோம்.

“தென்னிந்தியாவில் கருத்தரிப்பு தொடர்பாக பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளிவருகின்றன. தம்பதியினரிடையே கருத்தரிப்பது மிக விரைவாக குறைந்து வருகிறது என்று இந்த ஆய்வுகள் எச்சரிக்கை விடுக்கின்றன.

தற்போது 6 தம்பதிகளில் ஒரு தம்பதி, இயற்கையாக கருத்தரிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கோவை போன்ற நகரங்களில், கருத்தரிப்பு குறைந்து வரும் சூழல், வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு, மரபணுக் காரணங்கள் மட்டுமின்றி, சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம் என பல்வேறு காரணங்கள் உள்ளன.


உரிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும்.
கருத்தரிக்க விரும்புவோரிடையே, வயதின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வும், கருத்தரிப்பில் பாதிப்பை உண்டாக்கும் சுற்றுச்சூழல் காரணிகள், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் குறித்த விழிப்புணர்வும் அவசியம். இது தொடர்பான அனைத்து விவரங்களையும், மருத்துவ ஆலோசனைகளின்போது சிகிச்சை பெறுவோரிடம் அவசியம் எடுத்துக்கூற வேண்டும்.வயதை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆறு மாதங்களாக கருத்தரிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தாலோ அல்லது முன்பே மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டிருந்தாலோ, அவர்கள் உடனடியாக கருத்தரிப்புக்கான மருத்துவ மதிப்பீடைப் பெற வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சினைமுட்டைகளை முற்றிலும் இழக்கும் அபாயமுள்ள இளம் பெண்களுக்கு, தங்கள் முட்டைகளை பாதுகாப்பதில் கவனத்தை செலுத்தச் செய்ய வேண்டும்.


விரைவாக பரவக்கூடிய, சினைப்பையைப் பாதிக்கும் புற்றுநோய் அல்லது இதர நோய்களுடன் உள்ள பெண்களுக்கு சிகிச்சைகள் தேவைப்படுமெனில், அந்த சிகிச்சைகள் எதிர்காலத்தில் கருத்தரிப்பதில் ஏதேனும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக்கூடியவையாக இருந்தால், உடனடியாக அவர்கள் ஐ.வி.எஃப். மற்றும் கருமுட்டைகளைப் பாதுகாக்கும் க்ரையோப்ரசர்வேஷன் மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சினைமுட்டைகளின் செயல்திறன் குறையும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கும் இளம் பெண்களும், இந்த மருத்துவ நடைமுறையின் மூலம் பயனடையலாம். இதேபோல, தாமதமாக குழந்தையைச் சுமக்க விரும்பும் பெண்களுக்கும் இது சரியான தீர்வாக அமையும்.

ஆண்களின் விந்தணுக்களையும் க்ரையோப்ரசர்வேஷன் முறையில் பாதுகாப்பதும், கருத்தரிப்பைப் பாதுகாக்கும் ஓர் உயர்நிலை மருத்துவ நடைமுறையாகும்” என்றார்.

SCROLL FOR NEXT