தமிழகம்

வந்தேண்டா பால்காரன்- பால் பண்ணையாளரான சிவில் இன்ஜினியர்!

செய்திப்பிரிவு

ஆர்.கிருஷ்ணகுமார்

ஒரு மாட்டுல ஆரம்பிச்சேன், இப்ப 170 மாடுகள் வெச்சிருக்கேன். வீடுகளுக்கு மட்டும்தான் பால் சப்ளை செய்வேன். விக்கறதுக்கோ, மொத்த ஆர்டருக்கோ பால் சப்ளை செய்யறதில்லை. வாங்கறவங்க கண்ணு முன்னாடி பால் கறந்து கொடுக்கறோம்” என்கிறார் கோவையைச் சேர்ந்த ‘கிராமத்துப் பால்’ பண்ணை உரிமையாளர் கே.ஜனார்த்தனன் (36). சிவில் இன்ஜினியர், கட்டிட ஒப்பந்ததாரர் என்று பன்முகங்கள் இருந்தாலும், தரமான பால் விற்பனையாளர் என்ற அடையாளம்தான் கோவையில் இவருக்கு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

பால்போல வெள்ளை மனம் கொண்டவர் என்றெல்லாம் முன்பு புகழ்வார்கள். இப்போதோ, பாலில்கூட கலப்படம் வந்துவிட்டது. தரமான பால், நாட்டுப் பாலுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய பலர் தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில், கட்டிட ஒப்பந்தங்கள், கட்டுமானங்கள் என பரபரப்பாய் இருந்த சூழ்நிலையிலும், மாட்டுப் பண்ணையைத் தொடங்கி, சுத்தமான, தரமான பாலை மக்களுக்கு வழங்குவது மட்டுமே லட்சியம் என்ற நோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஜனார்த்தனன். கோவை கணபதியிலிருந்து காந்தி மாநகர் செல்லும் வழியில் உள்ள ‘கிராமத்துப் பால்’ பண்ணையில் இந்த இளைஞரை சந்தித்தோம்.

“கோயம்புத்தூர்தான் எங்க பூர்வீகம். பெற்றோர் கந்தசாமி-நீலாமணி. அப்பா பொதுப்பணித் துறை கட்டுமான ஒப்பந்ததாரர். பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள குரும் பாளையத்தைச் சேர்ந்த அம்மா நீலாமணி, விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவங்க. கோயம்புத்தூர்ல பள்ளிக் கல்வியும், பி.இ. சிவில் இன்ஜினியரிங்கும் படிச்சேன். அப்பாவழியில் கட்டிட ஒப்பந்தங்களை எடுத்து செஞ்சேன். 2011-ல் திருமணம், மனைவி அபிநயா திருப்பூர் ,மூலனூரைச் சேர்ந்தவங்க. தனியார்பள்ளியில டீச்சராக வேலை செஞ்சாங்க.

மாமனார் தந்த மாடு!

கோயம்புத்தூருக்கு வந்த பின்னாடி, பாக்கெட் பால் அவங்களுக்குப் பிடிக்கலை. இதனால என்னோட மாமனார் ஒரு மாட்டை பரிசாக கொடுத்தார். அதுல பால் கறந்து, வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திக்கிட்டோம். ஒரு நாள் நெருங்கிய நண்பரும், முக்கியப் பிரமுகருமான ஒருவர் வீட்டுக்கு வந்தார். நாங்க கொடுத்த காபியை சாப்பிட்ட அவர், பால் எங்க வாங்கறீங்கனு கேட்டார். வீட்டிலேயே மாடு வளர்த்து, பால் கறந்துக்கறோம்னு சொன்னோம். உடனே அவர், ‘இனிமே தினமும் எங்க வீட்டுக்கு ஒரு லிட்டர் பால் கொடுத்துவிடுங்க’னு கேட்டார். நாங்க தயங்கியபோது, கட்டாயம் பால் கொடுக்கணும்னு சொல்லிட்டாரு. இதனால இளைஞரை வேலைக்கு வெச்சு, தினமும் அவர் வீட்டுக்கு பால் கொடுத்து அனுப்பினேன். ஒரு லிட்டருக்கு ரூ.120 கொடுத்தாரு. ஆனால், அந்த இளைஞருக்கு சம்பளம், போக்குவரத்து செலவுனு மாதம் ரூ.5 ஆயிரம் செலவாச்சு. அந்த நண்பர்கிட்ட இதைப் பற்றி சொன்னேன். உடனே, அவர் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் கிட்ட பேசி, எல்லோர் வீட்டுக்கும் பால் சப்ளை செய்யலாம்னு சொன்னாரு.

நாங்க ஒரேயொரு மாட்டை வெச்சிக் கிட்டுத்தான் பால் கொடுக்கறோம், எப்படி இத்தனை வீட்டுக்கு பால் கொடுக்கறது ன்னு கேட்டேன். உடனே, ஓர் ஆண்டுக்கான பால் பணத்தை முன்பணமா வாங்கிக் கொடுத்து, இதுல மாட்டை வாங்கி, பால் கறந்து, எல்லா வீட்டுக்கும் சப்ளை பண்ணுங்கனு சொன்னாரு. வியந்து போயிட்டேன்.

அந்த சமயத்துல பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில, பொதுப்பணித் துறை கட்டுமானப் பணியை ஒப்பந்த அடிப்படையில் செஞ்சிக்கிட்டிருந்தேன். சரி, மாட்டு வளர்ப்பையும் மேற்கொள்வோம்னு, 4 மாடுகளை வாங்கி பால் கறந்து, வீடுகளுக்கு சப்ளை செய்யத் தொடங்கினேன். மாடு வளர்ப்பு, பால் கறப்பது, இயற்கை முறை விவசாயம்னு நிறைய கத்துக்கிட்டேன். தரமான பால் விநியோகம் செஞ்சதால, கணபதி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நிறைய பேர் வந்து, பால் வாங்கிட்டுப் போனாங்க.

கொஞ்சம் கொஞ்சமாக பால் வியாபாரம் பெருசாச்சு. ‘கிராமத்துப் பால்’ங்கற பெயரில் பால் பண்ணை தொடங்கினோம். காங்கயம் மாடு, எருமை, கலப்பின மாடுனு இப்ப 170 மாடுகள் வெச்சிருக்கோம். கணபதி, பெரியநாயக்கன்பாளையம், சூலூர்ல மாட்டுப் பண்ணைகள் செயல்படுது. இவற்றைப் பராமரிக்கும் பணியில் 60-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்காங்க.

வீடுகளுக்கு மட்டும்தான் சப்ளை!

எங்க பண்ணைக்கே வந்து, பால் வாங்கிட்டுப் போறாங்க. வீடுகளுக்கும் பால் சப்ளை செய்யறோம். ஆனா, எந்தக் காரணத்தைக் கொண்டும் வணிக நோக்கத்துக்காக பால் விற்பனை செய்யறதில்ல. மளிகைக் கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர், மால்னு எங்கேயும் பால் கொடுக்கறதில்ல. வீடுகளுக்கு மட்டும்தான் பால் கொடுக்கறோம். பால் சார்ந்த தயிர், மோர், வெண்ணெய், நெய், பனீர்னு வெவ்வேற பொருட்களையும் தயாரிக்கிறோம். நம்பிக்கையான இடத்துல பால் வாங்கறோம்னு மக்கள்கிட்ட நம்பிக்கை ஏற்படுத்தணும்ங்கறதுக்காக, அவங்க கண் முன்னாடியே பால் கறந்து கொடுக்கறோம்.

கோயம்புத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் , ஈரோடு சித்தோடு பகுதிகள்ல 40 ஏக்கர்ல மாட்டுத் தீவனங்களை பயிர் சாகுபடி செய்யறோம். எங்க மாடுகள்கிட்ட இருந்து கிடைக்கற கோமியம், சாணம் ஆகியவற்றைத்தான், பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தறோம். அதேபோல, மாடுகளுக்கு மக்காச்சோளம், சூப்பர் நேப்பியர் புல், கடலைப் புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கோதுமை தவிடு, மக்காச்சோளம்னு ஆரோக்கியமான தீவனம் மட்டுமே கொடுக்கறோம். அதேபோல, ஆங்கில முறை சிகிச்சையும் கொடுப்பதில்லை. மாடுகளுக்கு சிகிச்சை கொடுப்பது தொடர்பாக, பல பயிற்சி வகுப்புகளில் நான் கலந்துக்கிட்டு, நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து...

என்னோட மனைவி பள்ளி ஆசிரியர் வேலையை விட்டுட்டு, முழு நேரமாக பால் பண்ணைத் தொழிலுக்கு வந்துட்டாங்க. சிவில் இன்ஜினியரான தம்பி வேணுகோபால், கொள்முதல், சப்ளை, அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்த்துக்கறாரு. நாங்க அதிகாலை 2.30 மணிக்கெல்லாம் எழுந்து, சாணம் அள்ளி, பண்ணையை சுத்தம் செஞ்சிட்டு, 4.30 மணிக்கு பால் கறக்கத் தொடங்கிவிடுவோம். காலை 9 மணி வரைக்கும் பால் கறக்கும் வேலை இருக்கும். என்னோட மகள் அஸ்விகா, மகன் அத்விக்கும் இப்பவே பால் பண்ணைக்கு வந்துடறாங்க. மகனுக்கு 5 வயதுதான் ஆகுது. எல்லா மாடுகளையும் இனம்கண்டு சரியாக சொல்லுவான். சீக்கிரம் அவங்களும் பால் கறக்க கத்துக்கிடுவாங்க. தினமும் 2 முறையாவது மாடுகளை குளிக்க வைக்கறோம். எங்க குடும்பத்துல ஒருத்தராகத்தான் மாடுகளை கருதறோம்.

மாடுகளை வாங்கும்போது நல்ல இனமாக தேர்ந்தெடுத்து வாங்கணும். பால் பண்ணையில வேலை செஞ்சு, அடிப்படை விஷயங்களை தெரிஞ்சிக்கணும். முழு ஈடுபாட்டோட உழைக்கணும். சாணி அள்ளறதுல இருந்து, எல்லா வேலையும் செய்யணும். அதுங்களுக்கு முதலுதவி செய்யத் தெரிஞ்சிருக்கணும். நிறைய பேர் ஆர்வமாக பால் பண்ணை தொடங்கினாலும், அதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்காம, அந்த வேலையில் ஈடுபடறாங்க. அதனால்தான் வெற்றி பெற முடிவதில்லை. பேப்பர், பேனாவை வெச்சிக்கிட்டு, ஒரு லிட்டர் பால் இவ்வளவு விலை, இத்தனை லிட்டர் பாலுக்கு இவ்வளவு கிடைக்கும்னு கணக்குப் போடறதுல இருக்கற ஆர்வம், மாடுகளைப் பராமரிக்கறதுல இருக்கறதில்லை. கால்நடைகளை காதலிக்க வேண்டும். அதைப் புரிஞ்சிக்கிட்டு, பராமரிக்க வேண்டியது அவசியம்.

தினமும் 25 லிட்டர் பால் இலவசம்!

நான் நிறைய பேருக்கு, பால் பண்ணையோட அடிப்படை விஷயங்களை கத்துக்கொடுக்கறேன். நிறைய பேர் எங்க பால் பண்ணைக்கு வந்து, இதைப் பார்த்துட்டுப் போறாங்க. வேளாண்மை பல்கலைக்கழகம், விவசாயக் கல்லூரி மாணவர்கள், கால்நடை பராமரிப்பு படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் இலவசமாக வகுப்புகளை நடத்தறேன். தினமும் 25 லிட்டர் பாலை, கஷ்டப்படறவங்க, ஏழைக் குழந்தைகள், ஆதரவற்றோருக்கு இலவசமாக வழங்கறோம். இன்னும் அதிகமாக வழங்கவும் திட்டமிட்டிருக்கோம். கோயில்களுக்கும் பால் இலவசமாக வழங்கறோம். அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நிறைய விருது கொடுத்திருக்காங்க. தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிறந்த பால் பண்ணையாளர் விருது வாங்கியிருக்கேன். தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேரில் பாராட்டியது, நெகிழ்வாக இருந்தது.

பாட்டில் பாலும், ஐஎஸ்ஓ தரச் சான்றிதழும்...

கோயம்புத்தூரில் முதல்முறையாக பாட்டில் பால் விற்பனை செஞ்சது நான்தான். அதேபோல, 15-க்கும் மேற்பட்ட பால் பண்ணையாளர்களுக்கும் பாட்டில் பால் விற்பனையை அறிமுகம் செஞ்சுவெச்சேன். பால் பண்ணைக்காக முதல்முதலாக ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றதும் நான்தான்.

மேலும், 300-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் வளர்த்து, முட்டையும் விற்பனை செய்யறோம். கோயம்புத்தூர்ல இருக்கற விஐபி-க்கள் மட்டுமல்ல, கோயம்புத்தூருக்கு வரும் நடிகர்கள், பிரமுகர்கள், விஐபி-க்களும் எங்ககிட்ட பால் வாங்கறாங்க. பால் பண்ணை வைக்க விரும்பும் இளைஞர்களுக்கு, எல்லா ஆலோசனைகளும், உதவியும் செய்யத் தயாராக இருக்கிறேன். கோயம்புத்தூர்ல இருக்கற எல்லாருக்கும் தரமான, சுத்தமான பால் கிடைக்கணும். அதுதான் என்னோட லட்சியம். அதேபோல, எல்லாருடைய வீடுகள்லயும் மாடு வளர்க்கணும். நாய் வளர்க்கற மாதிரி, மாடு வளர்த்தால், பால் தேவை பூர்த்தியடைவதுடன், மத்தவங்களுக்கும் உதவ முடியும். எப்படி வேணும்னாலும் பணம் சம்பாதிக்கலாம். ஆனா, அதைவிட, மத்தவங்களுக்கு நல்ல பொருளைக் கொடுத்து, சேவை செய்யறோம்ங்கற திருப்திதான் பெருசு. என்னோட பயணம் இதை நோக்கித்தான் எப்பவும் இருக்கும்” என்கிறார் உறுதியுடன் ஜனார்த்தனன்.

SCROLL FOR NEXT