தமிழகம்

இந்திய தேசபக்தியே தேவை; இந்துத்துவ தேசபக்தி அல்ல: சீதாராம் யெச்சூரி

செய்திப்பிரிவு

புதுச்சேரி

இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும். அதுதான் தேசபக்த கடமை. இந்துத்துவ தேசபக்தியைச் சொல்லவில்லை. இந்திய தேசபக்தியே தேவை என்று சிபிஎம் தேசிய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

மூன்று நாட்கள் நடக்கும் சிபிஎம் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுமக்கள் பங்கேற்கும் மாநில உரிமைகளும், மக்கள் விரோத மசோதாக்களும் என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கம் நேற்று மாலை கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

இதில் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றுப் பேசியதாவது:
மோடி அரசு இந்தியாவில் இருப்பது போல் அமெரிக்காவில் ட்ரம்ப் அரசு உள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்காக வங்க தேசத்தை சேர்ந்த திரை நட்சத்திரம் மேற்கு வங்கத்துக்கு வந்தபோது தடுக்கப்பட்டது. ஜனநாயகம் சார்ந்த உள்நாட்டு விஷயத்தில் வெளிநாட்டவர் தலையிடக்கூடாது என்று தடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்தியப் பிரதமர், அமெரிக்காவில் ட்ரம்ப்புக்காக பிரச்சாரம் செய்கிறார். இருவருக்கும் உள்ள ஒற்றுமையான மக்களைப் பிளவுப்படுத்தும் சிறுபான்மை வெறுப்பு அரசியல் சிந்தாந்தமே இதற்கு முக்கியக் காரணம்.

மத்திய மாநில உறவுகள் சுருங்குகிறது. கூட்டாட்சிக் கோட்பாடு தூக்கியெறிப்படுகிறது. அதிகாரக் குவிப்பு இன்னும் அதிகரிக்கிறது. அரசியல் சாசனம் உறுதி செய்த ஜனநாயக உரிமைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
அரசியல் சாசனத்தின் பல்வேறு அம்சங்கள் நசுக்கப்படுவதற்கு உதாரணம் காஷ்மீர். முழுமையான மாநிலம் அழிக்கப்பட்டு விட்டது. இன்றும் அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு நீடிக்கிறது. அதை நிறுத்தி வைத்துள்ளதே உண்மை அம்சம்.

12 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளதை திட்டமிட்டு மறுக்கிறார்கள். அதிக அளவில் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. காஷ்மீரில் இனி நிலம் வாங்க முடியும் என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் பாஜக ஆளும் ஹிமாச்சலப் பிரசேதம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் நிலம் வாங்க முடியாது. ஏராளமான வடகிழக்கு மாநிலங்களிலும் நிலம் வாங்க முடியாது. இதை மறைத்துப் பேசுகிறார்கள். சிறப்பு அந்தஸ்துள்ள இதர மாநிலங்களை விட்டு காஷ்மீர் இலக்காக மாற முஸ்லிம் அதிகமாக வசிப்பதுதான்.

மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளன. மோடி கையாண்ட விதம்தான் இதற்கு காரணம். அரசியல் சாசனப் பிரிவு 370 அல்ல.

நன்கொடை கார்ப்பரேட் மூலம் வருவதால் அவர்களை வாழவைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் விருப்பப்படி வலதுசாரி அரசியல் திருப்பம் வலுப்பட்டு வருகிறது. அதுதான் பிரச்சினைக்கான காரணம். அதை சரி செய்ய இடதுசாரி திருப்பத்தை உருவாக்க வேண்டும். வலதுசாரி சவால்களைச் சந்தித்து வெல்ல முடியும்.

இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும். அதுதான் தேசபக்த கடமை. இந்துத்துவ தேசபக்தியைச் சொல்லவில்லை. இந்திய தேசபக்தியே தேவை என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மற்றும் எம்.பி.க்கள் டி.கே. ரங்கராஜன்,சு.வெங்கடேசன், புதுச்சேரி பிரதேசச் செயலர் ராஜாங்கம், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT