படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.
கடலூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர் வீரமணி, சர்வதேச கைப்பந்து போட்டிக்காக வெளிநாடு செல்லத் தேர்வாகியும், செலவுக்குக் காசில்லாமல் காத்திருக்கிறார்.
கடலூர் அருகே கள்ளுக்கடைமேடு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர் வீரமணி. 37 வயதான இவர் கைப்பந்து போட்டிகளில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கலந்துகொண்டு பரிசுகளைக் குவித்துள்ளார்.
தனது நிலை குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பகிர்ந்து கொள்கிறார் வீரமணி. ''சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல ரொம்ப ஆர்வம்ங்க. எப்பயும் விளையாடிக்கிட்டே இருப்பேன். பக்கத்துல பசங்களோட விளையாட ஆரம்பிச்சது இன்னிக்கு சர்வதேச அளவுல வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு.
கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சென்னைன்னு எல்லா மாவட்டங்களுக்கும் போய், விளையாடி இருக்கேன். 2014, 15-ல் நடந்த பாரா வாலிபால் போட்டில கர்நாடகா கூட மோதி இரண்டாவது இடம் ஜெயிச்சோம். 2016-ல ராஜஸ்தான் போய், ஜெய்ப்பூர் கூட விளையாடி ரன்னரா செலக்ட் ஆனோம்.
2018 செப்டம்பர்ல மங்களூருல நடந்த பீச் வாலிபால் போட்டியில கர்நாடகாவைத் தோற்கடிச்சு, முதல்ல வந்தோம். என்னோட ஆட்டத்தைப் பார்த்து இந்தியா டீம்ல செலக்ட் பண்ணாங்க. 2018 பிப்ரவரி மாசத்துல தாய்லாந்துல நடந்த பாரா வாலிபால் மேட்ச்ல, முதல் பரிசு கிடைச்சுது.
இந்த வருஷம் மார்ச் மாசம் சீனா போகவும் அடுத்த மாசமே மலேசியா போகவும் வாய்ப்பு வந்தது. ஆனா போறதுக்குப் பணம் இல்லாததால போக முடியல. இந்த வாட்டியும் தாய்லாந்து போக வாய்ப்பு கிடைச்சிருக்கு, ஆனா...'' என்று பேச முடியாமல் கண் கலங்குகிறார் வீரமணி.
சமாளித்து மீண்டும் பேசுபவர், ''கல்யாணமாகி, ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. கடலூர்ல பெட்ரோல் பங்க்ல வேலை செய்றேன். 6 ஆயிரம் சம்பளம் வீட்டுச் செலவுக்கே பத்தறதில்ல. இதுல பயிற்சிக்கும், போக்குவரத்துக்கும் எங்கே போவேன்? முடிஞ்சவங்க யாராவது உதவுனா அவங்க பேரையும் நாட்டோட பேரையும் காப்பாத்துவேன்'' என்கிறார் வீரமணி.
போட்டி விவரங்கள்
போட்டியின் பெயர்: தாய்லாந்து - இந்தியா- மலேசியா முத்தரப்பு அமர்வு கைப்பந்து போட்டி
நடைபெறும் நாள்: அக்டோபர் 27 - 31, 2019
இடம்: லொம்புரி, தாய்லாந்து
கட்டணத் தொகை: ரூ.48 ஆயிரம் (போக்குவரத்து, விசா, உணவு, தங்குமிடம், பயிற்சி ஆகியவை சேர்த்து)
விருப்பமுள்ளவர்கள், விளையாட்டு வீரர் வீரமணி வெளிநாடு செல்ல உதவலாம்.
தொடர்புக்கு: வீரமணி - 7708894969
A.veeramani.
AC/NO.520191061728280.
Corporation Bank
IFSC CODE: CORP0000388.
ALAPAKKAM.
- க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in