தமிழகம்

விபத்தில் பெண் உயிரிழப்பு; மோதிவிட்டு நிற்காமல் சென்ற மாநகரப் பேருந்து: ஓட்டுநருக்கு போலீஸ் வலை 

செய்திப்பிரிவு

சென்னை

வடபழனியில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் மீது மோதிய மாநகரப் பேருந்து நிற்காமல் சென்றுவிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நிற்காமல் சென்ற பேருந்தின் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கம் பச்சையப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் (55). இவரது மனைவி மீனா (50). இவர் வடபழனி விஜயா ஹெல்த் சென்டரில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். நேற்றிரவு 8 மணி அளவில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல ஆற்காடு சாலை வடபழனி பேருந்து நிலையம் அருகே வந்துள்ளார்.

ஆற்காடு சாலையைக் கடந்து பேருந்து நிலைய நுழைவு வாயில் உள்ளே சென்றுள்ளார். அங்கு வந்த மாநகரப் பேருந்து பஸ் நிலையத்தினுள் நுழைந்த போது, நடந்து வந்தவர் மீது மோதியுள்ளது. இதில், மீனா கீழே விழுந்து காயமடைந்துள்ளார். ஆனால் மோதிய பேருந்து நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த மீனாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு விஜயா ஹெல்த் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 12 மணி அளவில் உயிரிழந்தார். மீனா மீது மோதி விட்டுச் சென்ற மாநகரப் பேருந்தின் எண்ணை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மீனாவின் கணவர் கதிரேசன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஐபிசி பிரிவு 279 (அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது), 304 A (உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அலட்சியமாகச் செயல்படுதல்) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். உயிரிழந்த மீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சிசிடிவி பதிவு கிடைக்காவிட்டாலும் போலீஸார் நடத்திய தீவி்ர விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியது கேளம்பாக்கம் செல்லும் அரசுப் பேருந்து எனத் தெரியவந்தது. இதுதொடர்பாக நடத்துனர் முருகானந்த் குமரனை வடபழனி போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஓட்டுநர் ராஜேந்திரனைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT