விருதுநகர்
தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 90% இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (செப்.25) கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், "தமிழகத்தில் பணி நியமனம் செய்யப்படும் மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து மனு கொடுத்த விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கூறுகையில், "சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய அரசின் ரயில்வே துறையில் நடத்தப்பட்ட தேர்வில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தெற்கு ரயில்வே கோட்டத்தில் அதிகப்படியான வடமாநில இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் படித்து முடித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் பணி வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ரயில்வே துறை மட்டுமின்றி மத்திய மாநில அரசுகளின் பிற துறைகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதனால் படித்து முடித்த தமிழக இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.
எனவே தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 90% இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்றனர்.