சென்னை
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமாக இருந்த முக்கியக் குற்றவாளி ஜெயகோபால் எங்கே? அவரும் வெளிநாட்டிற்குத் தப்பிவிட்டாரா? என சுபஸ்ரீ மரண வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
கடுமையான கண்டனத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை கையிலெடுத்த உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது. சுபஸ்ரீ உயிரிழப்பு குறித்த வழக்கு நீதிபதி சத்திய நாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, "அரசு அதிகாரிகள், மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எவ்வளவு ரத்தம் தான் உங்களுக்குத் தேவைப்படும்? சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றவும், அதனைத் தடுக்கவும் கடுமையான உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எந்தவொரு உத்தரவையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. தலைமைச் செயலகத்தை மட்டும்தான் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவில்லை. நாங்களே எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அரசு உத்தரவுகளை நாங்கள் ஏற்று நடத்த முடியாது” எனத் தெரிவித்தது.
“அரசியல் கட்சிகள் பேனர் வைக்கக்கூடாது என்ற முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காது. விவாகரத்திற்கு மட்டும்தான் தற்போது பேனர் வைப்பதில்லை. மற்றபடி எல்ல நிகழ்வுகளுக்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் உள்ளது” என நீதிபதிகள் கூறினர்.
மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் கடமையைச் செய்யத் தவறியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பறிபோயிருக்காது. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மாநகராட்சி ஆணையர் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு உத்தரவிட்டது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் கண்காணித்து, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். வழக்கு விசாரணையை சென்னை காவல் ஆணையர் கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கை நீதிமன்றமும் கண்காணிக்கும் என எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 25-ம் தேதிக்கு (இன்று ) ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் சுபஸ்ரீ மரணம் குறித்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், பரங்கிமலை காவல் துணை ஆணையர் தரப்பில் விசாரணை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை துணை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 பேரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ''வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை? லாரி ஓட்டுநர் மீது போடப்பட்ட வழக்குடன் பேனர் வைத்தவரை எப்படி சேர்க்கலாம்'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''பேனர் வைத்த ஜெயகோபால் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இன்று வரை போலீஸ் கைது செய்யவில்லை. விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும் வழக்கு விசாரணையை டிஜிபி கண்காணிக்க உத்தரவிடவேண்டும்'' என வாதம் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமாக இருந்த முக்கியக் குற்றவாளி ஜெயகோபால் எங்கே? அவரும் வெளிநாட்டிற்குத் தப்பிவிட்டாரா?'' எனக் கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.