தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக இரண்டு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் இன்று(புதன்கிழமை) அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டாலும்கூட இடைத்தேர்தலை மனதில் கொண்டு 2 மாதங்களுக்கு முன்னரே அதிமுக பூத் கமிட்டி அமைத்து வேலைகளைத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நாராயணன்?
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய தந்தை பெயர் வெட்டும் பெருமாள் நாடார்.
நாராயணன் 1986 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் வரை அதிமுக கிளை கழகச் செயலாளராகப் பணியாற்றி உள்ளார். 1996 முதல் ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவராக ஒரு முறையும், துணைத்தலைவராக இருமுறையும் பணியாற்றி உள்ளார்.
2004 -ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பாளையங்கோட்டை தேர்தல் பணிக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேர்தல் பணிக் குழு உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார். 2009-ம் ஆண்டு திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். 2012-ம் ஆண்டு மாவட்ட புறநகர் அதிமுக துணைச் செயலாளராகப் பணியாற்றி உள்ளார்.
2013-ம் ஆண்டு முதல் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். ரெட்டியார்பட்டி நாராயணனின் மனைவி பவளச் செல்வி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நாராயணனுக்கு 54 வயது ஆகிறது.
2 மாதங்களுக்கு முன்பே தொடங்கிய பணிகள்..
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தனி மாவட்டமாகப் பிரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல்வர் தென்காசி வருகை தந்தார். அப்போது, அமமுகவிலிருந்து ஏராளமானோர் விலகி அதிமுகவில் இணையும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வந்தபோதே இடைத்தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுச் சென்றனர். அப்போதே பூத் கமிட்டி அமைப்பது, அதற்கு நிர்வாகிகளை நியமிப்பது, களப்பணி ஆற்றுவது என தேர்தல் ஆயத்த வேலைகள் தொடங்கின.
அதனால் தேர்தல் தேதி வெளியாவதற்கு முன்னரே அதிமுக களப்பணியை முடித்துவிட்டு இனி வேட்பாளருடன் பிரச்சாரத்துக்கு சென்றால் போதும் என்று தயார் நிலையில் இருந்தது.
நாங்குநேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் நாராயணன் மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்பதால் உற்சாகமாக களம் இறங்கியுள்ளார். இனி நாங்குநேரி தேர்தல் களம் களை கட்டும் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
நாங்குநேரியில் பலமுறை அதிமுக வெற்றி கண்டிருந்தாலும்கூட கடந்த 2016-ம் ஆணடு தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும் நாங்குநேரி தொகுதியில் தோல்வியைத் தழுவியது. அதனால் இந்த இடைத்தேர்தலில் இழந்த தொகுதியை மீண்டும் பெற கடும் முயற்சியுடன் களமிறங்குகிறது என அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.