திருப்பூர்
திருப்பூரில் தரமற்ற உணவு தயாரித்த, உரிமம் மற்றும் பதிவு இல்லாத 32 விடுதிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி , கல்லூரி களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படும் உணவு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி விடுதிகளில் நியமன அலுவலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 64 விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 32 விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது: 24 பள்ளிகள், 8 கல்லூரிகள் என மொத்தம் 32 விடுதிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 14 விடுதிகளில் தரமற்ற உணவு தயாரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும், 18 விடுதிகள் உரிமம் இல்லாமல் செயல்பட்டதாலும் நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இவற்றை 20 நாட்களுக்குள் சரி செய்ய சொல்லி உள்ளோம். மீண்டும் ஆய்வு செய்யும்போது, விதிகளை பின்பற்றாமல் இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து விடுதிகளில் ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறோம். உணவு தயாரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் மருத்துவச்சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். தொற்றுநோய் உள்ளவர்களை பணியில் அமர்த்தக்கூடாது. உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் பயன்படுத்தும் தேதி உள்ளிட்டவை ஆய்வு செய்தோம். தூய்மையான, தரமான உணவுகளை மட்டுமே தயாரித்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.