தருமபுரியில் பாஜக சார்பில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். 
தமிழகம்

370-வது சட்டப் பிரிவு நீக்கத்துக்கு தமிழகத்தை தவிர வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இல்லை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தகவல்

செய்திப்பிரிவு

தருமபுரி

காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு ரத்து நடவடிக்கைக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படவில்லை என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தருமபுரியில் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட பாஜக சார்பில், தேச ஒற்றுமை பிரச்சாரம்-சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ நீக்கம் தொடர்பான மக்கள் சந்திப்புக் கூட்டம் நேற்று தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது:

1950-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு இயற்றப்பட்டது. இச்சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க தடையாக இருந்து வந்தது. அந்த சட்டப் பிரிவின் தொடக்கப் பகுதியிலேயே, ‘இந்த சட்டம் தற்காலிகமானது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சட்டப் பிரிவை ரத்து செய்த நடவடிக்கையின் நோக்கம் அறியாமல் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சட்டம் ரத்தானதால் மலைவாழ் மற்றும் பட்டியல் இன மக்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கத் தொடங்கியுள்ளது. பெண்களுக்கு வாரிசு உரிமை கிடைத்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் அங்கு ராணுவ வீரர்கள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை ஆகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை 50 ஆயிரம் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டும், மூடப்பட்டும் உள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கத்துக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறவில்லை.

இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT