டி.ஜி.ரகுபதி
கோவை
கோவை மாநகர வாக்காளர்களின் முகவரியை ஒப்பிட்டு, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடி விவரங்கள் சரிபார்ப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட இருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு, நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தினரும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநகராட்சியின் 100 வார்டுகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டு, வார்டு எண்கள் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘உள்ளாட்சித் தேர்தலுக்காக, பிஹாரில் உள்ள 5 மாவட்டங்களில் இருந்து 12,379 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 13 கன்டெய்னர் லாரிகளில் ஓரிரு தினங்களில் கோவை மாநகருக்கு கொண்டுவரப்பட உள்ளன. இதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு, பெங்களூரு புறநகர், பெல்லாரி ஆகிய இடங்களில் இருந்து 5,312 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 5 கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட உள்ளன. இப்பணியில், மாநகராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தஸ்த்திலான இரண்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது மாநகராட்சியால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 14 ஆயிரத்து 608 வாக்காளர்கள் இருந்தனர். அப்போது, மாநகரில் 1,197 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது மக்கள்தொகை அதிகரிப்பு, எல்லை வரையறை போன்ற பணிகளால் 19 வாக்குச்சாவடிகள் அதிகரித்து, மொத்தம் 1,216 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, கடந்த மக்களவைத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், வார்டு வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 14 லட்சத்து 16 ஆயிரத்து 726 வாக்காளர்கள் உள்ளனர்’’ என்றனர்.
20 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் கூறும்போது, ‘‘உள்ளாட்சித் தேர்தலுக்காக கண்காணிப்பாளர் அந்தஸ்த்துக்கு மேல் உள்ள 20 அதிகாரிகள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, வருவாய் பிரிவு போன்ற அனைத்து துறை அதிகாரிகளும் இடம்பெறுவர். ஓர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் 5 வார்டுகள் என, 20 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 100 வார்டுகள் ஒதுக்கப்படும்.
இவர்களின் பெயர், விவரம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒப்புதலுக்கு பின்னர் அறிவிக்கப்படும். தற்போது வார்டு எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒரு வார்டுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு, அதே வார்டில்தான் வாக்குச்சாவடி மையம் ஒதுக்கப்பட்டுள்ளதா என கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.