தமிழகம்

'கத்தியோடு போஸ் கொடுக்கும் விஜய்; தலையைப் போலத்தான் வால் இருக்கும்'- அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை

'பிகில்' படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நடிகர்கள் பேசுவதில் எங்களுக்கு என்ன பயம் இருக்கிறது? எல்லோராலும் எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது. ஒரு கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் அதை வளர்த்தவர் எம்ஜிஆர்.

ரத்தம் சிந்தி, உருவாக்கப்பட்ட கோட்டைதான் அதிமுக. மக்களின் கொள்கைகளே அதிமுகவின் கொள்கை. நல்ல கருத்துகளை எம்ஜிஆர் எப்படித் திரைப்படங்களில் கொண்டுவந்தாரோ, அதேபோல ஆட்சியிலும் கொண்டு வந்தார். இதன்மூலம் போற்றுதலுக்குரிய தலைவராக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருக்கின்றனர்.

எம்ஜிஆர் எந்தப் படத்திலாவது சிகரெட் பிடிப்பது போல, குடிப்பது போல, கத்தி வைத்திருப்பது போல நடித்திருக்கிறாரா? அண்மையில் 'பிகில்' பட போஸ்டரைப் பார்த்தேன். ஒரு கத்தியை வைத்து விஜய் போஸ் கொடுக்கிறார். பார்க்கும் ரசிகர்கள் என்ன செய்வார்கள்? அதையேதான் பின்பற்றுவார்கள். தலையைப் போலத்தான் வால் இருக்கும்.

ஊடகங்கள் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது கதாநாயகர்களுக்கு நன்றாகவே தெரியும். சினிமாவில் இருப்பவர்களுக்கும் தெரியும். இதனால் நல்ல கருத்துகளைப் பரப்பி. எம்ஜிஆரைப் போல வாருங்கள். உங்களுக்கு மாலை போட மக்கள் தயாராக இருப்பார்கள்.

நல்ல விஷயங்களைப் பார்க்காமல், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ஒரு சமுதாயம் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களைத் திணிக்கக்கூடாது. அதைவிட மோசமான வேறு செயல் கிடையாது. வரலாறும் அவர்களை மன்னிக்காது.

படம் ஓட வேண்டும்; பிரபலமாக வேண்டும் என்பதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. கல்லூரி படிப்பதற்கான இடம். சட்டத்துக்கு உட்பட்டே இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. சென்னை, மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருந்தால் சுபஸ்ரீ மரணம் நடந்திருக்காது என்று பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கடுமையான எதிர்வினையாற்றியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT