2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் வென்றது. அதன் உறுப்பினர் வசந்தகுமார் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார். அவர் எம்.பி.யாகத் தேர்வானதால் அவர் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்தால் அந்தத் தொகுதியும் காலியானது.
இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் வரும் 23-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரையில் இந்த முறையும் திமுக ஆதரவுடன் காங்கிரஸே களமிறங்குகிறது. ஆளும் கட்சியான அதிமுக நேரடியாகப் போட்டியிடும் எனத் தெரிகிறது. இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஏற்கெனவே முடிந்து விட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பரந்து விரிந்த தொகுதியாக நாங்குநேரி விளங்குகிறது. நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரையில் நாங்குநேரி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களும், நாங்குநேரி, ஏர்வாடி, களக்காடு ஆகிய பகுதிகளும் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. திருநெல்வேலி மாநகரில் உள்ள கேடிசி நகர் பகுதிகளும் கூட நாங்குநேரி தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
பெருமளவு கிராமப்புறங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் விவசாயமே முக்கியத் தொழில். வறட்சியையும், வளமையையும் கொண்ட தொகுதியாக நாங்குநேரி உள்ளது. தாமிரபரணி ஆறு பாய்வதால் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.
சிற்றாறு, பச்சையாறு, நம்பியாறு என மற்ற ஆறுகள் இருந்தாலும், நாங்குநேரி பகுதிகளில் குளத்துப் பாசனம் மூலமே விவசாயம் நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து விவசாயிகளையும், பொதுமக்களயும் உலுக்கி வருகிறது. நாங்குநேரி பகுதியில் தாமிரபரணி மூலம் பல பகுதிகளில் குடிநீர் வழங்கப்படுகிறது.
விவசாயத்தைத் தவிர பெரிய தொழில் ஏதும் இல்லை. சிறுசிறு தொழில்கள் மட்டுமே தொகுதியில் காணப்படுகிறது. இந்தத் தொகுதியைச் சேர்ந்த பலரும் தொழிலுக்காக சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் என்று சென்றுவிடும் சூழலும் உள்ளது.
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்
நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் பல்பொருள் உற்பத்தி பூங்கா அமைக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு முடிவெடுத்தது. மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முயற்சியால் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் இந்தத் திட்டம் வேகமெடுக்கவில்லை.
2,500 ஏக்கர் நிலப்பரப்பில் பல்பொருள் உற்பத்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் எந்த நிறுவனமும் தொழில் தொடங்க முன்வரவில்லை.
அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக கூறப்பட்டாலும் பெரிய அளவில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என இப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். நாங்குநேரி பல்பொருள் உற்பத்தி பூங்கா திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் வாக்குறுதி மட்டுமே கொடுக்கும் சூழல் உள்ளது.
சமூகங்கள்
நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரையில் நாடார், தேவர், யாதவர் சமூக வாக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. மதரீதியாக கிறிஸ்தவர்கள் வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளன.