ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

காலநிலை மாற்றம்; கிரெட்டா துன்பெர்க்கின் குற்றச்சாட்டு மக்கள் கோபத்தின் வெளிப்பாடு: ராமதாஸ்

செய்திப்பிரிவு

சென்னை

ஸ்வீடன் மாணவி கிரெட்டா துன்பெர்க்கின் குற்றச்சாட்டு, மக்கள் கோபத்தின் வெளிப்பாடு என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த தலைவர்கள் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுகளும், உடனடி நடவடிக்கைகளும் அவசியம் என்று பேசினர்.

இந்நிலையில் காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியாளாகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமி காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

அம்மாநாட்டில் பேசிய கிரெட்டா, "உலகின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் சரிந்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம் பற்றியும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விசித்திரக் கதைகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?," என உலக நாடுகளின் தலைவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார். மேலும், காலநிலை மாற்றத்தின் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்நிலையில், கிரெட்டா துன்பெர்க் பேச்சு குறித்து ராமதாஸ் இன்று (செப்.24) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியொட்ட பதிவில், "புவி வெப்பமயமாதலை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை மாற்ற வேண்டும். இதை உலக அளவில் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும் என்று ஐநா புவி வெப்பமயமாதல் சிறப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது எண்ணத்தைச் செயல்படுத்த காலநிலை அவசர நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டும்.

புவி வெப்பமயத்தைக் கட்டுப்படுத்த 2022-ல் எட்டப்பட வேண்டிய மரபுசாரா மின்னுற்பத்தி இலக்கு 175 ஜிகாவாட்டிலிருந்து 450 ஜிகாவாட்டாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மோடியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. புவி வெப்பமயத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆசிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ வேண்டும்.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் உலகத் தலைவர்கள் தோற்றுவிட்டதாக ஐநா மாநாட்டில் 16 வயது ஸ்வீடன் மாணவி கிரெட்டா துன்பெர்க் குற்றம் சாட்டியிருப்பதும், அவர் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்படுவதும் மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உணர வேண்டும்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT