கேக் வெட்டும் திருமாவளவன் 
தமிழகம்

அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாடிய திருமாவளவன்: ஸ்பெயின் மக்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

அமெரிக்கா

சர்வதேச மாநாட்டுக்காக அமெரிக்கா சென்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான, தொல்.திருமாவளவன் அங்கு தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அமெரிக்காவில் நியூஜெர்சியில் நடைபெற்ற 'சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள்' என்னும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார். கடந்த செப்.22-ம் தேதி அம்மாநாட்டில் பேசிய தொல்.திருமாவளவன், சாதியவாதம் ஒரு பெரும் வன்கொடுமை என ஐநா சபை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 17-ம் தேதி திருமாவளவனின் பிறந்த நாள். இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று (செப்.23) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள், திருமாவளவனின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். ஸ்பானிஷ் மக்கள் ஒருங்கிணைத்திருந்த பிறந்த நாள் விழாவில் திருமாவளவன் பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிறந்த நாள் விழாவில் ஆங்கிலத்தில் திருமாவளவன் உரையாற்ற அதை ஸ்பானிஷ் மொழியில் ஒரு பெண் மொழியாக்கம் செய்தார். அப்போது திருமாவளவன் "நான் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தவன். இந்தியாவில் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். அவரின் கொள்கை வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும் இந்தியாவில் போராடி வருகிறேன்.

அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன். அம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், 24 நாடுகளிலிருந்து பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சாதியவாதப் பிரச்சினைகளை ஐநா சபையில் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநாட்டில் வலியுறுத்தினேன். உங்களையெல்லம் சந்தித்ததில் மகிழ்ச்சி. எனக்குப் பிறந்த நாள் விழாவை ஒருங்கிணைத்து வாழ்த்தியமைக்கு நன்றி" என திருமாவளவன் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT