சென்னை
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயரை 'தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம்' என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம், இந்திய இசை, நிகழ்த்துக் கலைகள், கவின்கலை குறித்த படிப்புகளை கற்றுத்தரும் பல்கலைக்கழகம். இசையில் முதுகலைப் பட்டம், கவின்கலைகளில் முதுகலைப் பட்டம் உள்ளிட்ட துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் உள்ளன. இப்பல்கலைக்கழகம் 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நிறுவப்பட்டது. அப்பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராகவும் ஜெயலலிதா விளங்கினார்.
இந்நிலையில், இப்பல்கலைக்கழகத்தின் பெயரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநரின் உத்தரவுப்படி, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள ஆணையில், "தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகச் சட்டம், 2013 இயற்றப்பட்டு, அச்சட்டம் 14.11.2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கலை பண்பாட்டுத் துறை ஆணையரின் கருத்தை ஏற்று, தமிழ்நடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயரை 'தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம்' என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிடுகிறது.
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகச் சட்டம் 2013-க்கு உரிய திருத்தங்கள் தனியே வெளியிடப்படும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.