ஆர்.டி.சிவசங்கர்
நீலகிரியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ரேபீஸ் நோய் பாதிப்பு கண்டறியப்படாததால், ரேபீஸ் நோய் இல்லாத மாவட்டமாக நீலகிரி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில்,ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தியும் பாஸ்டியர் ஆய்வகத்தால் நிறுத்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெறி நாய்களிடமிருந்து பரவும் ரேபிஸ் நோய் மரணத்தையும் ஏற்படுத்தும். சர்வதேச அளவில், ஆசியாவில்தான் அதிகம் பேர் வெறிநாயால் கடிபட்டு, இறக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் அதிக மரணங்கள் நிகழ்கின்றன. 15 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகி, உயிரிழக்கின்றனர்.
இந்த நோய்க்கு முன் தடுப்பு நடவடிக்கையே முக்கியமானது என்கிறார் சர்வதேச கால்நடை சேவை அமைப்பு இயக்குநர் இலோனா ஆட்டர். அவரிடம் பேசினோம். “உலக அளவில் ஆசியாவிலும், ஆசிய அளவில் இந்தியாவிலும்தான் ரேபீஸ் நோய்களால் உயிரிழப்புகள் அதிகம் நேரிடுகின்றன. குறிப்பாக, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பலியாகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 60,000 பேர் ரேபீஸ் நோயால் உயிரிழக்கின்றனர்.
இந்தியாவில் இந்நோய் குறித்த அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு இல்லாததால், சரியான புள்ளி விவரங்கள் இல்லை. ஆண்டுக்கு 200 பேர் வரை இந்தியாவில் இந்த நோய் பாதிப்பால் இறப்பதாக அறிவிக்கப்படுகிறது.
ரேபீஸ் நோய்க் கிருமி நமது ரத்தத்தில் கலப்பதால் மட்டுமே ரேபீஸ் நோய் ஏற்படுகிறது. ரேபீஸ் நோய் பாதிக்கப்பட்ட நாய் 7 நாட்களில் இறந்துவிடும். இந்தக் காலகட்டத்தில், அந்த நாய் வேறு நாயையோ அல்லது மனிதர்களையோ கடித்தால், ரேபீஸ் நோய் குறிப்பிட்ட நாய் அல்லது மனிதருக்குப் பரவும். நோய் பாதிக்கப்பட்ட நாயை குணப்படுத்த முடியாது. முன் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடுவதுதான் சிறந்தது” என்றார்.
வரும் 28-ம் தேதி 13-வது சர்வதேச ரேபீஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் நோக்கம், ரேபீஸ் நோயை அகற்ற தடுப்பூசி போடுவது. இந்த சூழலில், ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில், ரேபீஸ் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது நீலகிரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரேபீஸ் நோய் தடுப்பூசி உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பல இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன. உதகை கூட்ஷெட் பகுதியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்துள்ளன.
அதேபோல, பந்தலூர் பகுதியில் தெரு நாய்க் கூட்டம் ஒரு முதியவரை சூழ்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் ரேபீஸ் நோய் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதாக அந்நிறுவன இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் எஸ்.சிவகுமார் கூறும்போது, “பாஸ்டியர் ஆய்வகத்தில் திசு வளர்ப்பு முறை மூலம் ரேபீஸ் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 2015-ம் ஆண்டு வரை மருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய திட்டம் மூலம், சோதனை முறையில் தடுப்பூசி தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைக்குப் பின், மத்திய அரசு குழு ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் தரக் கட்டுபாட்டு சான்றிதழ் மற்றும் வணிகரீதியாக உற்பத்தி செய்வதற்கான உரிமம் வழங்கிய பின்னரே, வணிக ரீதியாக உற்பத்தி மீண்டும் தொடங்கும்.
அதுவரை, ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தி, கோவைக்கு மாற்றப்படும். இதற்கு ஆய்வகம் அமைக்க கோவையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நில பரிமாற்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னர், உற்பத்தி தொடங்கும். 2025-க்குள் அங்கு ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தி செய்து, விநியோகம் செய்யப்படும்” என்றார்.
இந்நிலையில், தற்போது ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தி செய்து, நோயாளிகளுக்கு கைகொடுக்கிறது இந்தியன் இம்முனோலாஜிக்கல்ஸ் நிறுவனம். மத்திய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஓர் அங்கமான இந்த நிறுவனம் உதகையில் 1999 முதல் ரேபீஸ் நோய் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து வருவதாக அந்நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஆனந்த்குமார் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, “உதகை நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து, சர்வதேச அளவில் தரம் வாய்ந்தது. ஆண்டுக்கு ஒரு கோடியே 40 லட்சம் டோஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. ரேபீஸ் நோய் தடுப்பு மருந்துக்கு தேவை அதிகம் உள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து 35 வெளிநாடுகளுக்கு இம்மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரூ.450 முதல் ரூ.500 வரை விலையுள்ள இந்த தடுப்பு மருந்து, எங்கள் நிறுவனம் மூலம் ரூ.140-க்கு விற்கப்படுகிறது. மருந்து உற்பத்தியில் 75 சதவீத மருந்து உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீத மருந்து மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது” என்றார்.
இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளாலும், மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவும் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நீலகிரியில் ரேபீஸ் நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. நீலகிரியில் ரேபீஸ் நோய் கண்டறியப்படாததால், இம்மாவட்டத்தை ரேபீஸ் இல்லா மாவட்டமாக அறிவிக்க உலக சுகாதார நிறுவனத்துக்கு, மாநில சுகாதாரம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.