கூடலூர்
சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரைப் பொதுமக்கள் பாராட்டினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் ஜாக்சன் (50). இவர் காலை 8.30 மணி அளவில் கூடலூரை அடுத்த செம்பாலா அட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அந்தச் சாலையில் எல்டோ என்பவரின் வீட்டுப் பகுதியைக் கடந்தபோது சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தார். உடனே ஆட்டோ ஓட்டுநர் ஜாக்சன் மற்றும் பயணிகள் இறங்கிப் பணத்தைச் சேகரித்து எடுத்து எண்ணிப் பார்த்தனர். அப்போது அதில் 46 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்தது.
ஜாக்சன் சக ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தகவல் அளித்த பின் பணத்தை கூடலூர் உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், சக்திவேல் ஆகியோரிடம் நேரில் ஒப்படைத்தார். சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை காவல் துறையினர், பொதுமக்கள் பாராட்டினர்.
இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த சிகாமணி என்பவர், பைக்கில் வந்த போது பாக்கெட்டில் இருந்து பணம் தவறி விழுந்துள்ளதாக கூறி காவல் நிலையத்திற்கு வந்தார். போலீஸார் விசாரித்த பின் பணத்தை அவரிடம் கொடுத்தனர்.