மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இதில், வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சார வியூகம் குறித்து வைகோ ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்துள்ளன.
இந்நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, ஆட்சி மன்றக் குழு மற்றும் உயர்நிலைக் குழுவின் கூட்டம், கட்சித் தலைமையகமான சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதில் வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சார வியூகம், வெற்றி வாய்ப்புகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆலோசனை நடத்துகிறார்.