கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள பாசன வாய்க்கால்களை அந்தந்த விவசாயிகளே சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு நீர் ஆதாரமாக இருப்பது வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு, வீராணம் ஏரி ஆகியவை. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான இந்த பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்பட வில்லை. பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் மண் மேடிட்டு தூர்ந்து போய் உள்ளது. வாய்க்கால் முழுவதும் நாணல் புதர்களும் செடி மற்றும் கொடிகளும் மண்டி கிடக்கிறது.
இதனால் சம்பா பருவ காலத்தில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், ஒரு சில விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வயல்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்களை இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் மூலமாக சொந்த செலவில் தூர்வாரி கொள்கின்றனர்.
இதுபோல, எடையார் கிராமத்தில் உள்ள உடையூர் வாய்க்காலை செல்வமணி என்ற பெண் விவசாயி தனது நிலத்துக்கு பாசன நீர் கிடைக்க ஏதுவாக சொந்த செலவில் வடக்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலில் தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பகுதிகளில் வாய்க் கால்களை தூர்வார தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்குவது வழக்கம். இந்த நிதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு மட்டும் சுமார் ரூ.2 கோடி ஒதுக்கப்படும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப் படவில்லை. இதனால் கடை மடை விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் விவசாய பணி களை மேற்கொள்வதில் அவதிப்படு கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க் கால்களை தூர்வார வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.